கண்ணீரைத் துடைக்கும் அறம்.. சிறை சொல்லும் கசப்பான உண்மைகள்!
இயக்குநர் தமிழ் மற்றும் விக்ரம் பிரபு கூட்டணியில் வெளியாகியுள்ள சிறை, அதிகார வர்க்கத்தின் கோர முகத்தையும், தனிமனித அறத்தையும் பேசும் ஒரு காவியமாக உருவெடுத்துள்ளது. உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் செதுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஏன் அவசியம் பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான ஆழமான அலசல்.
தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே சில அபூர்வ முத்துக்கள் கிடைக்கும். அந்த வரிசையில் "சிறை" ஒரு மிக முக்கியமான படைப்பு. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் கலைப்படைப்புகள் எப்போதும் ஒருவிதக் கனதியுடன் இருக்கும். அதற்குக் காரணம் அதன் அடிப்படையாக இருக்கும் 'அறம்' மற்றும் படைப்பாளியின் 'நேர்மையான நோக்கம்'. சுரேஷ் ராஜகுமாரி மற்றும் இயக்குநர் தமிழ் ஆகியோரின் இந்த முயற்சி, வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, பார்வையாளர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் ஒரு கருவியாக மாறியிருக்கிறது.
'டாணாக்காரன்' படத்தின் மூலம் காவல்துறைக்குள் இருக்கும் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டிய இயக்குநர் தமிழ், 'சிறை' படத்தின் மூலம் தனது முத்திரையை மீண்டும் பதித்துள்ளார். ஒரு முன்னாள் காவலராக அவர் கண்ட காட்சிகள், அனுபவித்த வலிகள் அனைத்தும் திரையில் அத்தனை பரிவுடன் வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு 'பரிவு' என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் உரக்கச் சொல்கிறது. பரிவில்லாத அதிகாரம் என்பது சர்வாதிகாரத்தின் தொடக்கம் என்பதை படம் நெடுகிலும் வரும் காட்சிகள் உணர்த்துகின்றன.
இந்தத் படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவை எங்கும் காண முடியவில்லை, மாறாக 'கதிரவன்' என்ற பாத்திரமாகவே அவர் வாழ்ந்திருக்கிறார். ஒரு நல்ல படைப்பின் வெற்றி என்பது நடிகர்கள் மறைந்து கதாபாத்திரங்கள் மேலோங்கி நிற்பதே. அந்த வகையில் விக்ரம் பிரபுவின் உடல்மொழியும், உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதமும் அபாரம். குறிப்பாக, ப்ரீ-கிளைமாக்ஸ் காட்சியில் அப்துல் ரவுப் கதாபாத்திரத்தின் அந்த அலறல், திரையரங்கை விட்டு வெளியே வந்த பின்னரும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
திரைக்கதை அமைப்பில் 'செகாவின் துப்பாக்கி' என்றொரு புகழ்பெற்ற உத்தி உண்டு. அதாவது, ஒரு கதையின் தொடக்கத்தில் காட்டப்படும் ஒரு சிறு விஷயம் அல்லது பழக்கம், கதையின் இறுதியில் ஒரு பெரிய மாற்றத்தையோ அல்லது தேவையையோ பூர்த்தி செய்ய வேண்டும். 'சிறை' திரைப்படத்தில் இந்த உத்தி மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கதாபாத்திரங்களின் பழக்கவழக்கங்கள் முதல் பின்னணியில் காட்டப்படும் பொருட்கள் வரை ஒவ்வொன்றும் ஒரு காரணத்திற்காகவே வைக்கப்பட்டிருக்கின்றன. இது பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான திரை அனுபவத்தைத் தருகிறது.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்தின் கனத்தை ஒவ்வொரு நொடியும் கூட்டுகிறது. சமூக மாற்றங்கள் ஒரே நாளில் நிகழ்ந்துவிடாது, ஆனால் ஒரு தனிமனிதனின் சிந்தனை மாற்றத்திற்கு படம் நிச்சயமாக வித்திடும்.
