1. Home
  2. சினிமா செய்திகள்

தொடர் வெற்றிகளின் ரகசியம் என்ன? சிவகார்த்திகேயன் மீது பாயும் விமர்சனங்கள்!

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய்க்குப் பிறகு குறுகிய காலத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சிவகார்த்திகேயன். அவரது 'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அவர் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன.


சிவகார்த்திகேயன் ஒரு சாதாரண மிமிக்ரி கலைஞராகத் தொடங்கி, இன்று கோலிவுட்டின் 'மினிமம் கேரண்டி' நாயகனாக உயர்ந்துள்ளார். விஜய் அரசியலுக்குச் செல்வதாக அறிவித்துள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்பப்போகும் அடுத்த 'மாஸ்' நடிகர் யார் என்ற போட்டி நிலவுகிறது. அந்தப் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன் தான். குறிப்பாக, குழந்தைகளையும் குடும்பங்களையும் கவரும் அவரது பாணி, அவருக்குப் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயனின் சமீபத்திய திரைப்படங்கள் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்றாலும், ஒரு குறிப்பிட்ட விமர்சனம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதாவது, படத்தின் தரம் குறைவாக இருந்தாலும், 'ஐடி விங்' (IT Wing) மற்றும் டிஜிட்டல் பிஆர்ஓ (Digital PRO) நிறுவனங்களுக்குப் பெருமளவு பணம் செலவு செய்யப்பட்டு, படம் குறித்த பாசிட்டிவ் கருத்துக்கள் செயற்கையாக உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களே கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலையில், சிவகார்த்திகேயன் படங்களுக்கு மட்டும் எப்படித் தொடர்ந்து ஆதரவான சூழல் நிலவுகிறது என்பதே பலரது கேள்வியாக உள்ளது. விமர்சகர்கள் சிலர், "பண பலத்தால் எதிர்மறையான கருத்துக்கள் முடக்கப்படுகின்றன" என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.

இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர். "வெறும் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு நடிகரால் இத்தனை லட்சம் ரசிகர்களைச் சம்பாதித்துவிட முடியாது. அவரது கடின உழைப்பும், சரியான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் திறமையுமே இந்த வெற்றிக்குக் காரணம்" என்கின்றனர். 'டாக்டர்', 'டான்' முதல் தற்போது 'அமரன்' வரை அவர் தொட்டுள்ள வசூல் மைல்கற்கள் சாதாரணமானவை அல்ல.

சமூக வலைதளங்களில் நடக்கும் இந்தப் 'பிம்பம்' குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், திரையரங்குகளில் குவியும் கூட்டம் சிவகார்த்திகேயனின் செல்வாக்கை நிரூபித்துக் கொண்டு தான் இருக்கிறது. விமர்சனங்களை அவர் தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் முறியடிப்பாரா அல்லது இந்த 'டிஜிட்டல்' சர்ச்சைகள் அவரது எதிர்காலத்தை பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.