அரசியலா? சினிமாவா? ஜனநாயகன் ரிலீஸ் பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்!
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன், 2026 பொங்கலுக்கு வெளியாகிறது. அரசியல் காரணங்களுக்காகவும், 'காந்தாரா 2' உடனான மோதலைத் தவிர்க்கவும் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'யுடன் மோத வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, முழுநேர அரசியலில் குதிக்கத் தயாராகிவிட்டார் நடிகர் விஜய். எச். வினோத் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் அவரது சினிமா பயணத்தின் கடைசிப் படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட் முதல் கோட்டை வரை எகிறிக்கிடக்கிறது. இப்படம் 2026 பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் பல அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் இந்தப் படத்தை 2025 தீபாவளிக்கே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. 2026-ல் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு அரசியல் அதிரடிப் படத்தை வெளியிட்டால், அது கட்சியின் வாக்கு வங்கிக்கும் தொண்டர்களின் உற்சாகத்திற்கும் பெரும் 'மைலேஜ்' கொடுக்கும் என விஜய் கணக்கு போட்டதே இந்தத் தேதி மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, வியாபார ரீதியாகவும் இப்படம் இப்போதே சாதனை படைக்கத் தொடங்கிவிட்டது. ஓடிடி, சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமங்கள் என அனைத்தும் இதுவரை இல்லாத பிரம்மாண்டத் தொகைக்கு கைமாறியுள்ளன.
இருப்பினும், இந்தத் தேதி மாற்றத்திற்குப் பின்னால் மற்றொரு சுவாரசியமான சினிமா அரசியலும் இருப்பதாகப் பேசப்படுகிறது. கடந்த முறை விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியானபோது, கன்னடத் திரைப்படமான 'கே.ஜி.எஃப் 2' உடன் மோதி வசூல் ரீதியாகப் பெரும் சவாலைச் சந்தித்தது.
தற்போது அதே ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'காந்தாரா 2' திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியானது. மீண்டும் ஒரு கன்னடப் படத்துடன் மோதி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும், தனது கடைசிப் படத்தை சோலோவாகக் கொண்டாடி வசூல் சாதனை படைக்க வேண்டும் என்றும் விஜய் கருதியதாகத் தெரிகிறது.
ஆனால், பொங்கல் ரிலீஸிலும் விஜய்க்குப் பெரிய சவால் காத்திருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'பராசக்தி' திரைப்படமும் அதே பொங்கல் ரேஸில் இணையவுள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்திற்கு இந்தப் படம் அஸ்திவாரமாக அமையுமா அல்லது சினிமா போட்டிகளால் வசூல் பாதிக்கப்படுமா என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒருவேளை தேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லாவிட்டால் விஜய் மீண்டும் சினிமாவுக்கு திரும்புவார் என அவரது தீவிர ரசிகர்கள் இப்போதும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, 2026 பொங்கல் திரைத்துறைக்கும் அரசியல் துறைக்கும் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
