1. Home
  2. சினிமா செய்திகள்

தேர்தல் தேதி vs ஜனநாயகன்.. ரிலீசுக்கு இருக்கும் ஒரே வழி இதுதான்!

jananayagan

ஜனநாயகன் விரைவில் வெளியாக இந்த ஒரே வழி மட்டும் இருக்கிறது .


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் நடிக்கும் கடைசித் திரைப்படம் என்பதால், ஜனநாயகன் மீது ஒட்டுமொத்த தென்னிந்தியாவே கண் வைத்துள்ளது. ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளை அதிரவைக்க வேண்டிய இந்தத் படம், தணிக்கை வாரியத்தின் (CBFC) பிடியில் சிக்கி தற்போது வரை முடங்கிக் கிடப்பது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திரைப்படம் அரசியலை மையமாக வைத்து எடுக்கும்போது சந்திக்கும் அத்தனை சவால்களையும் இப்போது 'ஜனநாயகன்' சந்தித்து வருகிறது.

ஆரம்பத்தில் படத்தைப் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் 'U/A' சான்றிதழ் வழங்கலாம் என்றே கருதினர். ஆனால், குழுவில் இருந்த ஒரு உறுப்பினர் மட்டும், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்பதால் இதை மறுதணிக்கை (Re-examination) செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். இதனால் படத்தின் ரிலீஸ் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. தனி நீதிபதி பி.டி. ஆஷா அவர்கள், படத்திற்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிட்டும், மத்திய தணிக்கை வாரியம் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கே திரும்பியுள்ளது.

ஜனநாயகன் படத்தில் வெறும் அரசியல் மட்டுமல்லாது, இந்திய பாதுகாப்புப் படை (Defense Force) தொடர்பான சில முக்கியக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. தணிக்கை வாரியத்தின் விதிகளின்படி, ராணுவம் அல்லது பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட காட்சிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவது அவசியம்.

இதனுடன் படத்தில் தற்போதைய அரசியல் சூழலை பிரதிபலிக்கும் வசனங்கள் மற்றும் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுவதால், இது தேர்தல் நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தணிக்கை குழு கருதுகிறது. இதன் காரணமாகவே தணிக்கை சான்று கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

நேற்று நடைபெற்ற விசாரணையில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் முந்தைய உத்தரவை ரத்து செய்தது. தணிக்கை வாரியத்தின் வாதங்களைக் கேட்காமல் அவசரமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், தணிக்கை வாரியம் தனது விளக்கத்தை அளிக்கப் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் சட்டப் போராட்டம் மீண்டும் ஒரு சுற்று ஆரம்பமாகியுள்ளது.

நீதிமன்ற வழக்குகளால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதால், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இப்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, தணிக்கை வாரியத்தின் ரிவைசிங் கமிட்டி (RC - Revising Committee) மூலமாகவே தீர்வு காண அவர்கள் திட்டமிட வாய்ப்பு உள்ளது.. சட்டப் போராட்டத்தை விட, தணிக்கை குழு பரிந்துரைக்கும் சிறு மாற்றங்களைச் செய்து படத்தை ரிலீஸ் செய்வதே புத்திசாலித்தனம் என திரைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜனநாயகன் படக்குழுவின் மிகப்பெரிய அச்சம் வரவிருக்கும் தேர்தல் அறிவிப்பு தான். ஒருமுறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 'தேர்தல் நடத்தை விதிகள்' அமலுக்கு வந்துவிட்டால், அரசியல் பின்புலம் கொண்ட படங்களை ரிலீஸ் செய்வது அசாத்தியமான காரியம். தேர்தல் ஆணையத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் படத்திற்குப் பெரிய முட்டுக்கட்டையாக அமையும்.

எனவே, பிப்ரவரி மாதத்திற்குள் எப்படியாவது தணிக்கை சான்றிதழைப் பெற்று, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே படத்தை வெளியாகிவிட வேண்டும் என படக்குழுவினர் இரவு பகலாகப் போராடி வருகின்றனர்.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.