1. Home
  2. சினிமா செய்திகள்

வாழ்க்கை ஒரு வட்டம்.. வைரலாகும் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

jananayagan-audio-lanuch

மலேசியாவில் நடைபெற்ற 'ஜனநாயகன்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் பகிர்ந்த "ஆட்டோக்காரர் மற்றும் குடை" பற்றிய நெகிழ்ச்சியான குட்டி ஸ்டோரி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.


மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஸ்டேடியத்தில், பிரம்மாண்டமான முறையில் தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், விஜய்யின் வருகையும் அவர் பேசிய பேச்சும் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக, ஒவ்வொரு மேடையிலும் விஜய் சொல்லும் 'குட்டி ஸ்டோரி'க்காகவே காத்திருக்கும் ரசிகர்களுக்கு, இந்த முறை ஒரு மனிதாபிமானமிக்க கதையை அவர் பரிசாக அளித்துள்ளார்.

மேடையில் மைக் பிடித்த விஜய், உதவி செய்வதன் அவசியத்தை விளக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான கதையைத் தொடங்கினார். ஒருமுறை கனமழை பெய்து கொண்டிருக்கும்போது, ஒரு ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் இருந்த குடையை தன்னிடம் பயணம் செய்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடம் கொடுக்கிறார். அந்தப் பெண் "இதை யாரிடம் திருப்பித் தருவது?" என்று கேட்டபோது, "யாருக்காவது தேவைப்படுபவர்களிடம் கொடுத்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு அந்த ஆட்டோக்காரர் சென்றுவிடுகிறார்.

அங்கிருந்து தொடங்கும் அந்த குடையின் பயணம் பல கைகளைக் கடக்கிறது. அந்தப் பெண் ஒரு முதியவருக்கும், அந்த முதியவர் ஒரு பூ விற்கும் பெண்ணிற்கும் மழையில் நனையாமல் இருக்க அந்தக் குடையைக் கைமாற்றுகிறார்கள். இறுதியாக, அந்த பூ விற்கும் பெண் ஒரு சிறுமியிடம் அந்தக் குடையைக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.

கதையின் க்ளைமாக்ஸை விஜய் விவரிக்கும்போது அரங்கம் அதிரும் வகையில் கைதட்டல்கள் எழுந்தது. மழையில் தன் குழந்தை நனைந்து வருவாளோ என்று கவலையுடன் காத்திருக்கும் அந்தச் சிறுமியின் தந்தை, ஆரம்பத்தில் குடையைக் கொடுத்த அதே ஆட்டோ ஓட்டுநர் தான். தான் செய்த ஒரு சிறிய உதவி, பலரைக் கடந்து மீண்டும் தன்னுடயை குடும்பத்திற்கே வந்து சேர்ந்ததை உணர்ந்த அந்த ஆட்டோக்காரரின் நிலையே மனிதாபிமானத்தின் வெற்றி என விஜய் குறிப்பிட்டார்.

"வாழ்க்கை ஒரு வட்டம், நாம் செய்யும் நல்லது நமக்கே வந்து சேரும். முடிந்தவரை சிறிய உதவிகளைச் செய்து பாருங்கள், வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யமாக மாறும்" என்று கூறி தனது உரையை விஜய் நிறைவு செய்தார்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு வழக்கத்தை விட அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. 'ஜனநாயகன்' படத்தின் டைட்டிலே அரசியல் ரீதியாகப் பார்க்கப்படும் நிலையில், விஜய் பகிர்ந்த இந்தக் கதை சமூக ஒற்றுமையையும், பரஸ்பர உதவியையும் வலியுறுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த நிகழ்வில் இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.