பராசக்தி படத்திற்கு சிக்கல்.. பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போகுமா?
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் தொடர்ந்த வழக்கால், ஜனவரி 10-ம் தேதி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி பொங்கல் வெளியீடாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கு படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "செம்மொழி" என்ற பெயரில் தான் எழுதிய கதையைத் திருடி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை மையமாகக் கொண்ட இந்தக் கதையை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களே நேரில் பாராட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 2010-ம் ஆண்டிலேயே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இந்தக் கதையைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.
மனுதாரர் ராஜேந்திரன் கூற்றுப்படி, அவர் இந்தக் கதையை முதலில் தயாரிப்பாளர் சேலம் தனசேகரனிடம் கொடுத்துள்ளார். அங்கிருந்து நடிகர் சூர்யா வழியாக இயக்குனர் சுதா கொங்கராவிற்கு இந்தக் கதை சென்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, தனது அனுமதியின்றி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவிமோகன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இதற்கு இசையமைத்துள்ளார். ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட கதையை சுதா கொங்கரா கையாண்டுள்ளதால், இதன் மீதான எதிர்பார்ப்பு வணிக ரீதியாக மிகவும் அதிகமாக உள்ளது.
பொதுவாக பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் சமயத்தில் இதுபோன்ற கதை திருட்டு புகார்கள் எழுவது திரையுலகில் வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், நீதிமன்றம் இடைக்காலத் தடை ஏதும் விதித்தால் மட்டுமே ஜனவரி 10 ரிலீஸ் பாதிக்கப்படும்.
தற்போது வரை படக்குழுவினர் தரப்பிலிருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. சமரசப் பேச்சுவார்த்தை அல்லது நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்தே ‘பராசக்தி’ பொங்கலுக்கு வருமா என்பது உறுதியாகும்.
