1. Home
  2. சினிமா செய்திகள்

சென்சார் போர்டு முட்டுக்கட்டை.. ஜனநாயகன் பராசக்தி ஒரே நாளில் வெளியாகுமா?

jananayagan

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.


தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் பிரம்மாண்ட படைப்பான ஜனநாயகன் படம் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. ஆனால், இதுவரை படத்திற்கு சென்சார் போர்டு எனப்படும் தணிக்கை குழு சான்றிதழ் வழங்காதது தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் (KVN) நிறுவனத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுவதாவது, கடந்த மாதமே படத்தை தணிக்கைக்காக சமர்ப்பித்துவிட்டதாகவும், டிசம்பர் 19-ம் தேதி படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சில மாற்றங்களை பரிந்துரைத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாற்றங்களை உடனடியாக செய்து மீண்டும் படத்தை சமர்ப்பித்த போதிலும், அதிகாரிகள் சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தொடர்ந்துள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இன்று விரிவான விசாரணை நடத்தியது. விசாரணையின் போது, படத்தின் ரிலீஸிற்கு வெறும் 3 நாட்களே இருப்பதால் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு வாதிட்டது. ஆனால், வழக்கை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதி, ஒரு முக்கிய கருத்தை முன்வைத்தார்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஏன் ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸை ஜனவரி 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கக்கூடாது?" என்று நீதிபதி கேள்வி எழுப்பியது அரங்கில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தணிக்கை நடைமுறைகள் முடிய கால அவகாசம் தேவைப்பட்டால், ரிலீஸ் தேதியை மாற்றுவது குறித்து யோசிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இது தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நீதிபதி குறிப்பிட்ட அந்த ஜனவரி 10-ம் தேதி தான், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகிறது. ஏற்கனவே கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் மோதிக்கொள்வது ரசிகர்கள் மத்தியில் பெரிய போட்டியை உருவாக்கியுள்ளது.

 ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ம் தேதியும், ‘பராசக்தி’ ஜனவரி 10-ம் தேதியும் வெளியாகவிருந்தன. ஒருவேளை நீதிமன்ற உத்தரவுப்படி அல்லது தணிக்கை தாமதத்தால் விஜய் படமும் 10-ம் தேதிக்கு தள்ளப்பட்டால், இரு பெரிய படங்களும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகும். ஒரே நாளில் இரு படங்களும் ரிலீஸானால் தியேட்டர் ஒதுக்கீட்டில் பெரும் சிக்கல் ஏற்படும். இது வசூலையும் பாதிக்கக்கூடும் என்பதால் ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.

நாளை (ஜனவரி 7) நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு தான் ‘ஜனநாயகன்’ படத்தின் தலைவிதியை தீர்மானிக்கப் போகிறது. ஒருவேளை நாளையும் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடித்தால், திட்டமிட்டபடி ஜனவரி 9-ம் தேதி படம் திரைக்கு வருவது சாத்தியமில்லை.

சென்சார் போர்டு ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறது? படத்தில் ஏதேனும் அரசியல் ரீதியான சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளனவா? அல்லது தொழில்நுட்ப காரணங்களா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எது எப்படியோ, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த சட்டப்போராட்டம் ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டுமன்றி, விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதான ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாளை நீதிமன்றம் தணிக்கை குழுவிற்கு என்ன உத்தரவு பிறப்பிக்கும்? ‘பராசக்தி’யுடன் ‘ஜனநாயகன்’ நேருக்கு நேர் மோதுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.