வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருமா? பொன்ராம் கொடுத்த அதிரடி அப்டேட்
தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய மிக முக்கியமான திரைப்படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. 2013-ல் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான இப்படம், கிராமத்து பின்னணியில் காமெடி மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தது. பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய இப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இப்படத்தின் வெற்றிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இடையேயான அசாத்தியமான காமெடி கெமிஸ்ட்ரி முக்கிய காரணமாக அமைந்தது. 'போஸ் பாண்டி - கொடி' கூட்டணியின் லூட்டிகளும், டி. இமானின் துள்ளலான இசை மற்றும் சூப்பர் ஹிட் பாடல்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இன்றுவரை மீம்ஸ் கிரியேட்டர்களின் ஃபேவரைட் படமாக இப்படம் இருந்து வருகிறது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அண்மையில் சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் நடிப்பில் 'கொம்பு சீவி' திரைப்படம் வெளியானது. ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் நிறைந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பொன்ராம், ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகம் தரும் ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், "வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை நான் நிச்சயம் எடுப்பேன். அதுதான் என்னுடைய அடுத்த மிகப்பெரிய கனவு. அந்தப் படத்தை உருவாக்குவது எனக்கு ஒரு சவாலான விஷயமாக இருந்தாலும், அதற்கான பணிகளில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடியாது என்று பலரும் கூறி வரும் நிலையில், தம்மால் அதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார். இதன் மூலம் மீண்டும் ஒரு கலர்புல்லான காமெடி கலாட்டாவிற்கு பொன்ராம் தயாராகி வருவது உறுதியாகியுள்ளது.
