பொங்கல் ரேஸில் தளபதி.. காத்திருக்கும் மாஸ் ட்ரீட்!
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனாலும், இந்த பொங்கலுக்கு ரசிகர்களை உற்சாகப்படுத்த பிளாக்பஸ்டர் ஹிட்படமான ரீ-ரிலீஸ் ஆகிறது.
தளபதி விஜய் ரசிகர்களுக்கு இந்த 2026 புத்தாண்டு ஒரு கலவையான உணர்வுகளுடன் தொடங்கியது எனலாம். அவரது நடிப்பில் உருவான மிக முக்கியமான அரசியல் த்ரில்லர் திரைப்படமான 'ஜனநாயகன்' கடந்த ஜனவரி 9-ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இதற்காக பிரம்மாண்ட கட்-அவுட்கள், பாலாபிஷேகம் என கொண்டாட்டங்களுக்கு தயாராக இருந்தனர். ஆனால், சில தொழில்நுட்பப் பணிகள் மற்றும் தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இது ரசிகர்களிடையே ஒரு சிறு தொய்வை ஏற்படுத்தியிருந்தது உண்மைதான்.
ரசிகர்களின் இந்த ஏமாற்றத்தை போக்கும் வகையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் 'தெறி' படம், இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. 2016-ல் வெளியாகி வசூல் சாதனை படைத்த இந்தப் படம், 10 ஆண்டுகளுக்குப் பிறகும் தியேட்டர்களில் அதே எனர்ஜியுடன் திரையிடப்பட உள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் உருவான முதல் படம் 'தெறி'. விஜய்யின் மாஸ் மற்றும் கிளாஸ் நடிப்பை சம அளவில் வெளிப்படுத்திய படங்களில் இதற்கு முக்கிய இடமுண்டு. குறிப்பாக, ஜோசப் குருவில்லா, விஜய் குமார் ஐபிஎஸ் மற்றும் தர்மஸ்வரன் என மூன்று விதமான பரிமாணங்களில் விஜய் அசத்தியிருப்பார். இதில் சமந்தாவுடனான காதல் காட்சிகள், எமி ஜாக்சனின் டீச்சர் கதாபாத்திரம் மற்றும் சிறுமி நைனிகாவுடனான தந்தை மகள் பாசம் என அனைத்துமே ரசிகர்களைக் கவர்ந்த அம்சங்களாகும்.
வில்லனாக நடித்த இயக்குநர் மகேந்திரனின் நடிப்பு, படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் உருவான பாடல்கள் இன்றும் பலரின் பிளே-லிஸ்ட்டில் ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக 'ஜித்து ஜில்லாடி' பாடல் திரையரங்குகளில் மீண்டும் அதிரப்போகிறது.
தற்போது தமிழ் சினிமாவில் பழைய சூப்பர் ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அண்மையில் வெளியான 'கில்லி', 'மங்காத்தா' போன்ற படங்கள் புதிய படங்களுக்கு நிகராக வசூல் செய்தன. அதே பாணியில், 'தெறி' திரைப்படமும் இந்த பொங்கல் விடுமுறை நாட்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் கிடைத்த தியேட்டர் ஒதுக்கீடுகள் (Screens) அனைத்தும் தற்போது 'தெறி' படத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் தளபதியின் ஆக்ஷன் அவதாரத்தை மீண்டும் ரசிகர்கள் காணப் போகிறார்கள். ஜனவரி 15-ம் தேதி திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூணும் என்பதில் சந்தேகமில்லை.
