அஜித்தின் கோட்டை மலேசியா.. மேடையிலேயே சீக்ரெட்டை உடைத்த விஜய்
மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில், தனது நண்பர் அஜித்குமார் மற்றும் அவரது பிளாக்பஸ்டர் படமான பில்லா குறித்து விஜய் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விஜய் மலேசியா சென்றது முதலே, அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மொத்த மலேசியாவும் அவருடையது (அஜித்) தான் என்ற குட் பேட் அக்லி படத்தின் வசனத்தை ட்ரெண்ட் செய்து வந்தனர்.
அஜித்தின் கார் பந்தய அணி மலேசியாவை மையமாக கொண்டு செயல்படுவதால், அவர் இந்த விழாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை என்றாலும், மேடையில் விஜய் பேசிய ஒரு விஷயம் ஒட்டுமொத்த அரங்கத்தையும் அதிரவைத்தது.
மேடையில் மைக் பிடித்த விஜய், மலேசியாவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள பிணைப்பை பற்றி பேசினார். அப்போது, "சில படங்களின் பெயர்களை சொன்னாலே நமக்கு மலேசியா தான் உடனடியாக நினைவுக்கு வரும். அந்த வகையில் எனது நண்பர் அஜித்தின் 'பில்லா' படத்தை நாம் நிச்சயம் சொல்லலாம்" என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
விஜய் 'அஜித்' மற்றும் 'பில்லா' என்ற பெயர்களை உச்சரித்த அடுத்த நொடி, அரங்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 2007-ல் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான 'பில்லா', 1980ல் ரஜினிகாந்த் நடித்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதும், இதன் பெரும்பகுதி மலேசியாவில் படமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் மற்றொரு சிறப்பம்சமாக, ஜனநாயகன் படத்தின் இயக்குனர் எச்.வினோத்தின் திரைப்பயணம் குறித்த ஒரு சிறப்பு வீடியோ (A.V) திரையிடப்பட்டது. அதில் எச்.வினோத் அஜித்துடன் இணைந்து பணியாற்றிய நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய மூன்று படங்களின் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
விஜய்யின் இந்த பெருந்தன்மையான பேச்சும், அஜித்தின் படங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் 'தல-தளபதி' ரசிகர்களிடையே இருந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். தற்போது 'மலேசியா அஜித்துடையது' என்ற ஹேஷ்டேக் மீண்டும் வைரலாகி வருகிறது.
