1. Home
  2. சினிமா செய்திகள்

தோல்வி பயமில்லை, போராடி வெல்வேன்.. தேசிய ஊடகத்தில் விஜய்யின் மாஸ் என்ட்ரி!

vijay-interview

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேசிய ஊடகமான என்.டி.டிவி-க்கு (NDTV) அளித்த சிறப்புப் பேட்டியில், தனது அரசியல் பயணம், 'ஜன நாயகன்' பட விவகாரம் மற்றும் தனது ரோல் மாடல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.


தமிழக அரசியலில் விஜய்யின் வருகை ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அவர் தனது கட்சியின் கொள்கை விளக்க மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், தற்போது தேசிய ஊடகங்களுக்கு அவர் அளித்து வரும் பேட்டிகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. குறிப்பாக, பிரபல ஆங்கில ஊடகமான என்.டி.டிவி-க்கு அவர் அளித்த பேட்டி, விஜய்யின் அரசியல் தெளிவையும் அவரது அடுத்தகட்ட நகர்வையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

தனது அரசியல் வருகைக்குப் பிறகு வெளியாகும் திரைப்படங்களுக்கு முட்டுக்கட்டை போடப்படலாம் என்பதை விஜய் முன்கூட்டியே கணித்திருந்தது அவரது பேட்டியில் புலப்படுகிறது. தற்போதைய சூழலில் ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்துப் பேசிய அவர், இதற்காகத் தான் வருத்தப்படுவதாகத் தெரிவித்தார். "எனது அரசியல் நிலைப்பாடுகளால் இப்படியான தடைகள் ஏற்படலாம், எனது திரைப்படங்கள் குறிவைக்கப்படலாம் என நான் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.

ஆனால், இதற்காகப் போராடும் எனது தயாரிப்பாளரின் நிலையை நினைக்கும்போதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது," என்று மிகுந்த முதிர்ச்சியுடன் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதிகார வர்க்கத்தின் நெருக்கடிகளைத் தான் எதிர்கொள்ளத் தயார் என்பதையே இது காட்டுகிறது.

அரசியலில் நீங்கள் ஒரு 'கிங்மேக்கராக' (Kingmaker) இருக்கப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு விஜய் அளித்த பதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. "நான் ஏன் ஒரு கிங்மேக்கராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நான் போராடி வெற்றி பெறுவேன்," என்று அவர் கூறியது, அவர் ஒரு 'கிங்' ஆக (King) உருவெடுக்கவே அரசியலுக்கு வந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது. கூட்டணி பேரம் அல்லது மற்றவர்களை ஆட்சியில் அமர வைக்கும் சக்தியாகத் தன்னைப் பார்க்காமல், நேரடியாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து மக்களுக்குச் சேவை செய்வதே தனது இலக்கு என்பதை அவர் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார்.

தனது அரசியல் பயணத்தில் வழிகாட்டிகளாக யாரைப் பார்க்கிறார் என்ற கேள்விக்கு, தமிழக அரசியலின் ஆளுமைகளான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரைத் தனது ரோல் மாடல்களாகக் குறிப்பிட்டுள்ளார். "இவர்கள் ஒவ்வொருவரும் தமிழக அரசியலில் தனிமுத்திரை பதித்தவர்கள். அவர்களின் விடாமுயற்சியும், மக்கள் செல்வாக்கும் என்னை வியக்க வைக்கிறது," என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது அதைத் துறப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், மக்களுக்காகத் தான் அதைச் செய்திருப்பதாகக் கூறிய விஜய், "சினிமா கரியரை கைவிடுவது எளிதானதல்ல, அதை நான் திட்டமிட்டே செய்தேன். இப்போது எனது முழு கவனமும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மீது மட்டுமே உள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் இந்த நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, சினிமாவை விட அரசியலே பிரதானம் என்ற அவரது உறுதிப்பாடு தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் தான் சம்பாதித்த புகழையும், பணத்தையும் விட மக்களின் நலனே முக்கியம் என அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையில் பார்த்த 'தளபதி'யை விட, களத்தில் நிற்கும் 'தலைவன்' விஜய்யைக் காண தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.