ராட்சசன் மாதிரி வேகம், விறுவிறுப்பு.. விஷ்ணு விஷாலின் Aaryan முழு விமர்சனம்

இயக்குநர் பிரம்மா மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் இணைந்துள்ள “Aaryan” ஒரு சாதாரண த்ரில்லர் அல்ல. ஒரு எழுத்தாளரின் தோல்வி, அவன் மனநிலையிலிருந்து பிறக்கும் கொலைகள், மற்றும் அவற்றைத் தடுத்து நிறுத்தும் ஒரு போலீஸின் போராட்டம் - இந்த மூன்று கோணங்களில்தான் படம் நகர்கிறது.
ஒரு தோல்வியடைந்த எழுத்தாளரின் கொலைகளில் தொடங்கும் கதை
படத்தின் தொடக்கமே நம்மை கவரும் வகையில் இருக்கிறது. ஒரு டிவி ஸ்டூடியோவில், எழுத்தாளரான அழகர் (செல்வராகவன்) நேரடி ஒளிபரப்பை கைப்பற்றி, தன் “ஐந்து நாள் சீரியல் கில்லிங் ஸ்டோரி” பற்றி உரையாடுகிறார். அது வெறும் கதை இல்லை - உண்மையிலேயே அவர் அடுத்த 5 நாட்களில் நடக்கும் கொலைகளை முன்கூட்டியே அறிவிக்கிறார்!
இந்த தொடக்கம் Se7en அல்லது Jigsaw-ஸ்டைலில் இருந்தாலும், செல்வராகவன் தன் intense acting-ஆல் அந்த சூழ்நிலையை உயிரோடு கொண்டு வருகிறார். ஆனால் 15 நிமிடங்களுக்குப் பிறகு, கதை முழுக்க விஷ்ணு விஷால் தோள்களில் விழுகிறது.
விசாரணை, வில்லன், மற்றும் அவரது மனநிலை!
DCP நம்பி (விஷ்ணு விஷால்) ஒரு கடினமான போலீஸ் அதிகாரி. குடும்பம், வாழ்க்கை எல்லாம் பின்னால் போயிருக்கும்; அவருக்கு வேலைதான் உலகம். அழகர் கொலைகளை முன்கூட்டியே வீடியோவாக வெளியிட்டு போலீஸை சவால் விடுகிறார். ஒவ்வொரு கொலையும் ஒரு “படிமம்” போல எழுதப்பட்டிருக்கிறது - ஒரு கதை, ஒரு அடையாளம், ஒரு நோக்கம்.
அழகர் சொல்வது “சமூகத்தில் மறக்கப்பட்ட ஹீரோக்களை” உலகம் நினைவில் கொள்ள வைக்க தான் கொலை செய்கிறேன்! அது ஒரு பைத்தியக்காரத் தத்துவம்தான்... ஆனால் அவன் மனநிலையைப் பார்த்தால், அது அவனுக்கு நியாயம் போலத் தோன்றுகிறது.
இரண்டாம் பாதி – வேகம், விறுவிறுப்பு, வலிமை
முதல்பாதி கொஞ்சம் நீளமாயிருந்தாலும், இரண்டாம் பாதி கதை சுருக்கமாகவும் தீவிரமாகவும் மாறுகிறது. “அடுத்த கொலை எங்கே?” என்ற கேள்வியோடு நம்பி ஓடிக்கொண்டிருக்கிறார். அழகர் விட்டுச் சென்ற ஒவ்வொரு கிளூ-வும் ஒரு புத்திசாலித்தனமான சதியாக மாறுகிறது. இரண்டாம் பாதியின் கிளைமாக்ஸ் - நம்பி தானே அந்த கொலைக்கதையின் “அடுத்த அத்தியாயம்” ஆக மாட்டிக்கொள்ளும் புள்ளி - அதுவே படத்தின் சிறந்த பகுதி.
நடிப்பு, தொழில்நுட்பம், பின்புலம்
விஷ்ணு விஷால் இன்னொரு முறை தன் தேர்ந்தெடுத்த கதாபாத்திரத்தில் மெருகூட்டியிருக்கிறார். செல்வராகவனின் தீவிர நடிப்பு, வில்லனாக இருந்தாலும் நம்மை இழுக்கிறது.ஷ்ரத்தா ஸ்ரீநாத் செய்த டிவி ஹோஸ்ட் கதாபாத்திரம் கதை நியாயப்படுத்தும் வகையில் செம்ம இணைப்பு. பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் - அனைத்தும் டென்ஷனை பிடித்தே வைத்திருக்கிறது.
முடிவில் – ஒரு புத்திசாலி த்ரில்லர், சிறிய குறைகளுடன்!
"Aaryan” ஒரு நன்றாக கட்டமைக்கப்பட்ட த்ரில்லர். முதல்பாதி சற்று நீளமாயிருந்தாலும், இரண்டாம் பாதி அதற்கான ஈடுசெய்கிறது. சமூகச் செய்தியை படத்தின் கடைசி பகுதிக்கு மட்டும் திணித்தது சற்று கட்டாயம் போல இருந்தாலும், மொத்தத்தில் இது ஒரு well-made psychological thriller. விஷ்ணு விஷால் – செல்வராகவன் கூட்டணி எதிர்பார்த்ததுக்கு தகுந்த அளவுக்கு ஈர்க்கிறது. “கொலைக்காரனும் ஒரு எழுத்தாளன் தான்… ஆனால் அவன் எழுத்து இரத்தத்தில் எழுதப்படுகிறது!”

