வருகின்ற மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சியின் பலத்தை அதிகப்படுத்துவதற்காக தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் எதிர்கட்சியான திமுக, தற்போது இஸ்லாமிய பெரும்பான்மை கட்சியான AIMIM- கட்சி தலைவரை பொதுக் கூட்டத்திற்கு அழைத்து இருப்பதாகவும், இதனால் திமுக கட்சியின் கூட்டணி அமைத்துள்ள சிறுபான்மை கட்சியினர் பெரும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட AIMIM என்ற இஸ்லாமிய பெரும்பான்மை கட்சி பல மாநிலங்களில் கால் பதித்துள்ளனர். அதோடு, சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் கூட கணிசமான வெற்றியையும் இக்கட்சி பெற்றது.
அதேபோல், இந்தக் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியின் பங்கு கண்டிப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் தமிழகத்தில் எந்தக் கட்சியுடன் இவர் கூட்டணி வைப்பார் என்ற ஆவல் பலரிடம் நிலவி வந்தது.
தற்போது ஜனவரி 6ஆம் தேதி நடக்க உள்ள திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஓவைசிக்கு திமுகவின் சார்பில், நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அழைப்பை திமுக சார்பில் அதன் சிறுபான்மையினர் அணித் தலைவரான மஸ்தான் நேரில் சென்று விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, ஓவைசி ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ள திமுகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளாராம். இதனைத் தொடர்ந்து ஏற்கனவே திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் சிறுபான்மை கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக மனிதநேய மக்கள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும் பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள சிறுபான்மை கட்சிகளுடன் கூட்டணி வைத்து செயல்பட்டு வரும் திமுக, தற்போது வெளி மாநிலத்தில் இருந்து ஒரு கட்சியை அழைத்திருப்பது பலரிடமிருந்து பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு, ஐபக் கொடுத்த அறிவுரையின் படிதான் ஓவைசிக்கு திமுக அழைப்பு விடுத்திருக்கும் என்று பலர் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர்.
அந்தவகையில் மூத்த பத்திரிகையாளரான ஆர் ராதா கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுக தலைவர் பொதுக்கூட்டத்திற்கு AIMIM தலைவரை அழைத்து இருப்பது குழப்பம் தருகிறது. காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமிழ்நாடு கூட்டணியை மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
எனவே, இவ்வாறு தன்னை மதச்சார்பற்ற என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் திமுக போர் இஸ்லாம கட்சியை தன்னுடன் இணைத்துக் கொள்ள முயற்சி செய்து வரும் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.