பிரபல யூடியூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தற்பொழுது இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். மாறனின் ஆன்ட்டி இந்தியன் மூவி அவரின் ருத்ரதாண்டவமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஆதம்பாவா கூறியுள்ளார்.
யூடியூபில் திரைப்படங்களை பற்றிய தனது கருத்துக்களின் மூலம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் தான் ப்ளூ சட்டை மாறன். தற்போது அவரே தன் இயக்கிய படத்தால் சர்ச்சைகளுக்கு ஆளாக்கப்பட்டு நீதிமன்றம் வரை சென்றார். தற்பொழுது அவருடைய படம் தணிக்கை சான்றிதழ் பெற்று வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
இந்தப் படத்தினைப் பற்றி தயாரிப்பாளர் ஆதம்பாவா கூறியிருப்பதாவது இந்த படத்தை எடுக்கும் போது பிரச்சனைகளும், சர்ச்சைகளும் ஏற்படும் என்று தெரிந்துதான் எடுத்தோம். இதுவரை சென்சார் அமைப்பினர் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு அடிப்படையில் சான்றிதழ் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் ஆன்ட்டி இந்தியன் திரைப்படத்தை பார்த்துவிட்டு என்ன சான்றிதழ் கொடுப்பது என்று குழம்பினர். பின்னர் மூன்று கரெக்ஷன்களுடன் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. மாறன் இயக்கியுள்ள இந்தப் படம் மற்ற திரைப்படங்களை விட மாறுபட்டு இருப்பதால் அவர்களுக்கு சற்று குழப்பம் ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.மேலும் சென்னை, பெங்களூர், மும்பை ஆகிய மூன்று இடங்களிலும் படம் பார்த்த சென்சார் கமிட்டியினர் அனைவருமே படத்தை பாராட்டத் தவறவில்லை. இதுவே எங்கள் படத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் ஒரு தயாரிப்பாளராக எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
இந்த படத்தை வாங்குவதற்காக பல பேர் தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படம் மாறனின் ருத்ரதாண்டவமாக இருக்கும் என்று கூறினார். மேலும் பத்திரிக்கையாளர்கள் மாறனிடம் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் சில வாக்கு வாதங்கள் உடன் பதில் அளித்தார்.
அதாவது இப்படம் மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் கட்சிகளைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதற்கு பத்திரிக்கையாளர்கள் தற்பொழுது மதத்தின் பெயரால் நிறைய கட்சிகள் உருவாகியுள்ளது அவர்களை மறைமுகமாக கூறுகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு சற்று தடுமாறிய மாறன் இல்லை அனைத்து மதத்தினர் பற்றியும் படத்தில் கூறியுள்ளோம் என்று பதிலளித்தார்.
மேலும் படத்திற்கு ஏற்பட்ட சர்ச்சைகளால் படம் பிரபலமடைந்துள்ளது எனவும் இவ்வாறு சிறு படங்களுக்கும் சர்ச்சைகளை ஏற்படுத்தி பிரபலபடுத்துங்கள் என்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். எது எப்படியோ இப்படத்தினை ட்ரோல் செய்வதற்காகவே தியேட்டருக்கு செல்வோம் என்று ரசிகர்கள் கருத்துக்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.