கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் தங்களது பிறந்தநாள் அன்று நடைபெறும் போட்டியில் சாதனை படைப்பது என்பது அவர்களுக்கு ஒரு அளவு கடந்த மகிழ்ச்சியை கொடுக்கும். அப்படி சாதனை படைத்த வீரர்கள் தங்கள் அணியையும் வெற்றிபெறச் செய்வது, என்பது ஒரு மகத்தான தருணமாக அமையும். அப்படி பிறந்தநாள் அன்று சாதனை படைத்த வீரர்கள் பட்டியல்.
ஜேசன் கில்லஸ்பி: இவர் தனது 31வது பிறந்தநாள் அன்று வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய ஒரு டெஸ்ட்போட்டியை வாழ்நாள் சாதனை போட்டியாக அமைத்துள்ளார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியில் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய கில்லஸ்பி 424 பந்துகளை சந்தித்து 26 பவுண்டரி, 2 சிக்சர்கள் உதவியுடன் 201 ரன்கள் குவித்தார். இவர் பிறந்தநாள் அன்று செய்த இந்த சாதனை மாபெரும் சாதனையாக அமைந்தது.
சச்சின் டெண்டுல்கர்: தனது 25வது பிறந்தநாள் அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சார்ஜா போட்டியை மறக்க முடியாத ஒரு போட்டியாக மாற்றினார்.. அது ஆஸ்திரேலிய அணியினராளும் மறந்திருக்க முடியாது. ஆம் அந்த போட்டியில் 131 பந்துகளை சந்தித்த சச்சின் 134 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். போட்டி முடிந்த பின்னர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக் நாங்கள் இந்தியாவிடம் தோற்கவில்லை சச்சின் டெண்டுல்கரிடம் தோற்று விட்டோம் என்று கூறினர். அந்த காலகட்டத்தில் இந்தப்போட்டியில் டெண்டுல்கர் ஆஸ்திரேலியா அணியின் பலம் வாய்ந்த பந்துவீச்சை தவிடுபொடி ஆக்கினார்.
யுவராஜ் சிங்: தனது 28வது பிறந்த நாளன்று இலங்கைக்கு எதிரான, ஒரு 20 ஓவர் போட்டியில் 207 ரன்களை இந்திய அணி அசால்டாக சேஷிங் செய்ய உதவினார். வெறும் 25 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 60 ரன்களை குவித்தார் யுவராஜ்சிங். அதே போட்டியில் 3 ஓவர்கள் வீசி, 23 ரன்கள் கொடுத்து, 3 விக்கெட்டுகளையும் எடுத்து இந்த வெற்றியை தனது 28வது பிறந்தநாள் பரிசாக இந்திய அணிக்கு வழங்கினார்.
ராஸ் டைலர்: 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 124பந்துகளுக்கு 131 ரன்களை குவித்து நியூசிலாந்து அணி வெற்றி பெற பெரிதும் உதவினார். 27 ஆம் பிறந்தநாள் அன்று இவர் இச்சாதனையை நிகழ்த்தினார். இவரின் உதவியால் நியூசிலாந்து அணி 302 ரன்கள் குவித்தது.
பீட்டர் சிடில்: ஆஷஸ் தொடர் என்றாலே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கும் கௌரவ போட்டி. அந்த போட்டியில் பீட்டர் சிடில் தனது 26ஆவது பிறந்தநாளன்று இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து பக்கமிருந்த போட்டி டிராவில் முடிந்தது.