திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

விஜய்யை விமர்சிக்கிறார்.. ரஜினியிடம் கைகட்டி போட்டோ எடுக்கிறாரு.. குழப்பத்தில் இருக்கிறாரா சீமான்?

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலுக்கு வந்து 15 ஆண்டுகளாகும் நிலையில், இக்கட்சி இன்னும் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை. அத்துடன் உட்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு, பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேறி, மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியில் இத்தனை ஆண்டுகள் இருந்த நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட 55 பேர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். நெல்லை பத்திரிக்கையாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமான் மீது, அக்கட்சியின் கொள்கைகள் மீது குற்றம்சாட்டி அக்கட்சியில் இருந்து விலகுவதாக கூட்டாகப் பேட்டி கொடுத்தனர். இதுகுறித்து நிர்வாகி அளித்த பேட்டியில் கூறியதாவது:

நெல்லை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிர்வாகிகள் கூறியதாவது:

எட்டு வருடத்தில் இருந்து பத்து வருடம் வரை நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறோம். நாம் தமிழர் கட்சியை திரு நெல்வேலியில் ஜீரோவில் இருந்து உருவாக்கியவர்களின் நாங்களும் ஒரு ஆள். இன்றைக்கு இந்த திருநெல்வேலி மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒரு பேஸ்மெண்டுக்கு மேல் இருக்கிறது என்றால் அந்த பேஸ்மெண்ட் உருவாக்கியவர்களுள் நாங்களும் இருக்கிறோம்.

எங்களுக்கு நாம் தமிழர் கட்சி அடுத்தகட்டத்துக்குப் போக வேண்டும். அண்ணன் சீமான் முதல்வர் ஆகிவிட வேண்டும். திரு நெல்வேலியில் இருந்து ஐந்து எம்.எல்.ஏக்களை கொடுத்துவிட வேண்டும் இதுதான் எங்களின் ஆசையாக இருந்தது. இதற்காக தொடர்ந்து ஓடினோம். எங்களின் சக்திக்கு மீறி நாங்கள் வேலை செய்தோம்.

ஆனால், சீமான் அண்ணன் கட்சிக் கொள்ளைகளில் இருந்து, அவரது கொள்கைகளில் இருந்தும் விலகியிருப்பதால், எங்களால் தொடர்ந்து அக்கட்சியில் இருக்க முடியவில்லை. நாங்கள், தொடர்ந்து 3 வருடமாகவே அவரைத் தொடர்ப்பு கொண்டு, நிர்வாகப் பிரச்சனைகள் பற்றிப் பேச முயன்றோம். அதேபோல், ஒரு மேடையில் ஒரு மாதிரியும், வேறு மேடையில் வேறு மாதிரியும் முரணாகவும் பேசுகிறீர்கள். அதற்கு முட்டுக்கொடுக்க முடியவில்லை.

15 வருடத்தில் 8 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே!

மக்களைப் பார்த்து சந்திக்க முடியவில்லை. வெறும் 8 சதவீதம் ஓட்டுகள் வாங்க 15 வருடம் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. இன்னும் 33 சதவீதம் ஓட்டு வாங்க எத்தனை வருடம் உழைக்க வேண்டும்? நமக்கான களத்தை உருவாக்க, இன்னும் எத்தனையோ உழைக்க வேண்டியுள்ளது என்று அவரிடம் விவரிக்க முயன்றோம்.

ஆனால் சீமான் எதற்குமே செவிகொடுக்கவில்லை. எதைச் சொன்னாலும், இது என் கட்சிடா, வெளியே போடா என்பதுதான் அவரது தீர்வாக இருக்கிறது. எனக்காகத்தான் ஓட்டுப் போட்டாங்க என்பதுதா அவரது விவாதம். மேடையில் மக்களுக்கு மரியாதையா பேசவில்லை. கொள்கையில் தெளிவில்லை.

ரஜினியிடம் கைகட்டி புகைப்படம்? யார் சங்கி?

காலையில் தம்பி எனவும் அடுத்த நாள் காலையில் வண்டியில் அடிபட்டு செத்துவிடுவார் என விஜய்யை விமர்சிக்கிறார். தமிழர், தமிழர் நலன், தமிழர் தலைவர் பிரபாகரன் என்பவர், ரஜினியிடம் கை கட்டி புகைப்படம் எடுத்திருந்தார். சங்கி கெட்ட வார்த்தை யில்லை என்கிறார். என்னை பார்த்து ஏன் சங்கி என்கிறார் என கேள்வி எழுப்புகிறார்.ஏன் அவர் குழப்பத்தில் இருக்கிறாரா? எங்கள் பிரச்சனையையும் எடுத்துக் கூற முடியவில்லை. இதுக்கு மேல் எங்களுக்கு இக்கட்சியில் இருக்கப் பிடிக்கவில்லை.

நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் பொழுது சாதி பற்றித்தான் பேசுகிறார் சீமான். அடுத்தகட்டத்துக்குப் போக வாய்ப்பில்லை. கட்சிக்குள் கட்டமைப்பு இல்லை. ஒரு தொகுதியை 38 பகுதியாகப் பிரிக்க வேண்டும் என்று கூறுகிறார். இது எப்படி சாத்தியம்? 2300 பொறுப்பாளரை எப்படி போடுவது?

Trending News