தமிழ் சினிமாவில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். இவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற 25 ஆண்டு கால கேள்விக்குள் கடந்த ஜனவரி மாத இறுதியில் முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும் தனியாக நின்றால் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்குகளை எடுத்து இரு திராவிட கட்சிகளின் வாக்குகளைப் பிரிப்பார் என்று பல்வேறு சர்வே களின் முடிவுகள் கூறியது. அவை அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக தனது உடல்நிலை பற்றி கூறி முற்றுப்புள்ளி வைத்தார் சூப்பர் ஸ்டார். இதனால் ரஜினிகாந்த் வைத்திருந்ததாக கூறப்பட்ட அந்த 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உள்ள வாக்குகள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி நீடித்துக் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு ரஜினிகாந்திற்கு கலைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. இதனால் அதிமுகவிற்கு பலம் கூட வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது தென்னிந்தியாவில் இதுவரை கன்னட நடிகர் ராஜ்குமார், தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ், இயக்குனர் கே விஸ்வநாத், தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் ஆகிய சிலருக்கு மட்டுமே இந்த உயரிய விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்க ரஜினிகாந்திற்கு தற்போது இந்த விருது கிடைத்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், காலை முதல் சமூக வலைத்தளங்களில் ரஜினியை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் ரஜினியின் ஆன்மீக அரசியல் மற்றும் மோடியின் திட்டங்களுக்கு ரஜினியின் ஆதரவு என்றைக்குமே பாஜகவிற்கு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்பட்டிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பூஸ்ட் போல் அமைந்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் அனைவரது வாக்குகளும் அதிமுக கூட்டணிக்கு வந்தடையும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுஒருபுறமிருக்க தாதா சாகேப் பால்கே விருதை வழங்கியதற்காக மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். மறுபுறம் வந்து ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் ரஜினி.