திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

சிகிச்சை பலனின்றி சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

கொரோனா தொற்றால் பொதுமக்கள் மட்டுமல்லாது திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பலியாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா மற்றும் ஒரு பிரபலத்தை தற்போது இழந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் சிவசங்கர்.

72 வயதாகும் சிவசங்கர் சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய மனைவியும், மூத்த மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இவர்களில் சிவசங்கர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரின் சிகிச்சை செலவை சமாளிக்க முடியவில்லை என அவருடைய இளைய மகன் சில நாட்களுக்கு முன்பு இணைய தளத்தில் உதவி கேட்டிருந்தார்.

இதற்கு நடிகர் சோனு சூட், தனுஷ், சிரஞ்சீவி உட்பட பிரபலங்கள் பலரும் உதவி செய்திருந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு சிவசங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய நுரையீரல் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்ததே அவருடைய இறப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சிவசங்கர் நடன இயக்குனர் மட்டுமல்ல பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லு முல்லு, வரலாறு உட்பட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் வெளியான மகதீரா திரைப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

மேலும் தல அஜித் நடித்த வரலாறு திரைப்படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதையும் பெற்றுள்ளார். அவரின் மரணம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய குடும்பத்தாருக்கு பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News