வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தெலுங்கு நடிகர்களுக்கு போட்டியாக புது அவதாரம் எடுக்கும் தனுஷ்.. அடுத்தடுத்து இத்தனை படங்களா.?

ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் ஏராளமான அவமானங்களையும், நிராகரிப்புகளையும் சந்தித்து தற்போது கோலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். அதுமட்டுமின்றி ஒரு தமிழ் நடிகராக இருந்து ஹாலிவுட் வரை சென்று சாதித்த பெருமையும் இவரையே சேரும்.

இன்றைய நிலவரப்படி தனுஷ் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. அதன்படி தற்போது தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்த பின்னர் அவரது அண்ணனும், பிரபல இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் நானே வருவேன் படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்துள்ளாராம்.

மேலும் இதுவரை தமிழ், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த தனுஷ் தற்போது முதன் முறையாக நேரடி தெலுங்கு சினிமாவில் நடிக்க உள்ளார். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல வரிசையாக நான்கு படங்களில் நடிக்க உள்ளாராம். தற்போது இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வரிசையில் தமிழ் படங்களை எல்லாம் முடித்த பின்னர் சேகர் கம்முலா இயக்க உள்ள புதிய படம் ஒன்றில் தனுஷ் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்றொரு தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளது.

dhanush
dhanush

இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து, தெலுங்கில் மேலும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் தனுஷ் நடிக்க உள்ளார். அந்த படங்களை டிவி நிறுவனம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தயாரிக்க உள்ளனர். ஆனால் இயக்குனர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழில் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள தனுஷ் தற்போது தெலுங்கிலும் பிசியாகி விட்டார். அதுவும் ஒரே சமயத்தில் நான்கு படங்களில் நடிக்க உள்ளார். இனிமேல் டோலிவுட்டிலும் தனுஷ் டாப் நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.

Trending News