ஹாலிவுட்டில் வெளியான ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போன்ற சூப்பர் ஹீரோ படங்கள் பல பாகங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வெளிநாடுகளில் குழந்தைப் பருவத்திலேயே காமிக்ஸில் சூப்பர் ஹீரோ கதைகளைப் படித்து வளர்கிறார்கள். அங்கு அந்த கதாபாத்திரங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டாரம் இந்தியாவில் மிக குறைவு.
இதன் காரணமாகவே இந்தியாவில் சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கப்படாமல் இருந்தன. இதைவிட முக்கியமான பிரச்சினை மற்றொன்று உள்ளது. பணம் தான் அது. சூப்பர் ஹீரோ படங்களை இயக்க பல மில்லியன்களில் பணம் தேவைப்படும் அதன் காரணமாகவே இந்தியாவில் சூப்பர் ஹீரோ படங்கள் அதிகம் எடுக்கப்படுவதில்லை.
இருப்பினும் இந்த தடைகளை கடந்து ஹிந்தியில் க்ரிஷ் என்ற சூப்பர் ஹீரோ படம் மூன்று பாகங்களாக வெளிவந்தது. தற்போது நான்காவது பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இதேபோல் தமிழில் மிஷ்கின் எடுத்த மூகமூடி படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் மலையாள சினிமாவில் புதிய முயற்சியாக முதன்முறை சூப்பர் ஹீரோ படம் ஒன்றை இயக்கி உள்ளனர். இப்படத்திற்கு மின்னல் முரளி என பெயர் வைத்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு தனது 25 வயதில் குஞ்ஞிராமாயணம் மலையாளப் படத்தை இயக்கிய பாசில் ஜோசப், மின்னல் முரளி படத்தை இயக்கி உள்ளார். இவரது 3-வது படம் இது.
இப்படத்தில் டொவினோ தோமஸ், அஜு வர்க்கீஸ், நம்மூர் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல இடர்களை கடந்து இப்படம் தயாராகியுள்ளது. டொவினோ தாமஸ் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பல பிரச்சனைகளுக்கு பிறகு உருவாகியுள்ள மின்னல் முரளி படம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாசில் ஜோசப்பின் முந்தைய இரு படங்களும் நையாண்டியில் சிறந்தவை. இதுவும் அதேபாணியில் இருப்பதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. மின்னல் முரளி சூப்பர் ஹீரோ படங்களின் இன்னொரு பரிமாணத்தை தரும் என நம்பலாம்.