கடந்த 2019ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த முறை ஏராளமான தமிழ் படங்கள் தேசிய விருதுகளை வாங்கியுள்ளன. அந்த வகையில் எந்தெந்த படங்கள் மற்றும் எந்தெந்த நடிகர்கள் விருதுகளை பெற்றுள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.
அந்த வரிசையில் முதலாவதாக சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்களுக்கான பட்டியலில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான ஆடுகளம் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆடுகளம் படத்திற்கு பின்னர் தனுஷ் பெறும் இரண்டாவது தேசிய விருது இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பங்கா மற்றும் மணிகர்ணிகா உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தட்டி சென்றுள்ளார். இவர் சமீபத்தில் தமிழில் வெளியான தலைவி படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதிக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கே.டி கருப்பு படத்தில் நடித்ததற்காக நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும், அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்திற்காக இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஒத்த செருப்பு படத்தின் ஒலிக்கலவை பணிகளுக்காக ரசூல் பூக்குட்டிக்கும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை அதிக தமிழ் படங்கள் விருதுகளை வென்றுள்ளன.