விரைவில் உருவாகும் தர்மதுரை படத்தின் 2ம் பாகம்.. ஆனா ஹீரோ விஜய் சேதுபதி இல்ல

தமிழில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தர்மதுரை என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த பட தலைப்பில் இயக்குனர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை இணைத்து படம் இயக்கினார். மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் சினிமா வாழ்வில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த படத்தை தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தயாரித்துள்ளார். இவர் தமிழில் தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான ஆர் கே சுரேஷ் தற்போது வேட்டை நாய் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து அவர் தர்மதுரை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகத்தின் போது இயக்குனர் சீனு ராமசாமியுடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதன் காரணமாக தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை வேறு ஒரு டைரக்டரை வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளார். அவர் இந்த படத்தை தயாரிப்பது மட்டுமல்லாமல், அவரே ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் பில்லா பாண்டி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது தர்மதுரை திரைப்படத்திலும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதன் முதல் பாகத்தில் நடித்த விஜய் சேதுபதி தற்போது விக்ரம், விடுதலை, காத்துவாக்குல 2 காதல் உட்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதனால்தான் ஆர்கே சுரேஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முடிவு எடுத்துள்ளார். இருப்பினும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்காதது நிச்சயம் அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும்.

தமிழில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே சிங்கம், பாகுபலி, காஞ்சனா போன்ற பல படங்கள் இரண்டு பாகங்களாக வெளி வந்து ரசிகர்களை கவர்ந்தது. அந்த வகையில் விரைவில் உருவாக இருக்கும் இந்த தர்ம துரை படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.