உதவி இயக்குனராக தனது திரைப் பயணத்தை தொடங்கிய இயக்குனர் சேரன் 1997 ஆம் ஆண்டு பார்த்திபன் மற்றும் மீனா நடிப்பில் வெளிவந்த பாரதிகண்ணம்மா படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. படங்களை இயக்கிய மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் தனது ரசிகர்களை கவர்ந்தார்.
ஆனால் ஆட்டோகிராப் படத்திற்கு பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். அதில் லாஸ்லியா – சேரனுக்கு இடையே இருந்த அப்பா-மகள் உறவு பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.
தற்போது படங்கள் இயக்காமல் ராஜாவுக்கு செக் மற்றும் ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும், ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது.
அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சேரனின் தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. இருந்தாலும், படப்பிடிப்பை ரத்து செய்யமால் தொடர்ந்து தனது காட்சிகளை சேரன் நடித்துக் கொடுத்துள்ளார்.