செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

யானை படம் முடிந்த கையோடு மாஸ் ஹீரோவை இயக்கும் ஹரி.. அப்ப அதிரடிக்கு பஞ்சமே இருக்காது

இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜய்யை வைத்து யானை திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். சாமி 2 திரைப்படத்திற்கு பிறகு சில காலம் எந்த படங்களையும் இயக்காமல் இருந்த ஹரி தற்போது இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் களம் இறங்கியுள்ளார்.

வழக்கமாக ஹரியின் திரைப்படங்களில் இருப்பது போலவே இந்தப் படத்திலும் பிரியா பவானி சங்கர், அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரைலரும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஹரி அடுத்ததாக இயக்க உள்ள திரைப்படத்தைப் பற்றிய தகவல் கசிந்துள்ளது. அந்த படத்தில் ஜெயம்ரவி முதல் முறையாக ஹரியுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். சமீபகாலமாக சில தோல்விப் படங்களைக் கொடுத்து வரும் ஜெயம் ரவிக்கு இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை சாணி காகிதம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்கிரீன் சீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ஏற்கனவே ஜெயம் ரவி அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மற்றொரு திரைப்படத்திலும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஹரி இயக்க உள்ள இந்தத் திரைப்படத்தையும் ஜெயம் ரவியை வைத்து அதே நிறுவனம் தயாரிக்க உள்ளது. அந்த வகையில் ஜெயம் ரவிக்கு இது மூன்றாவது திரைப்படமாக இருக்கிறது. மேலும் ஹரியின் முந்தைய திரைப்படங்களைப் போலவே இந்தப் படத்திலும் அதிரடி ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது யானை திரைப்படத்தின் பிரமோஷன்களில் பிஸியாக இருக்கும் ஹரி விரைவில் இந்த படத்தின் பணிகளை ஆரம்பிக்க இருக்கிறார். மேலும் ஜெயம் ரவியின் நடிப்பில் விரைவில் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படம் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News