வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ராஜமவுலியின் அடுத்த பிரமாண்ட காவியம். .. பொன்னியின் செல்வனை விட அதிக பட்ஜெட்டாம்

பாகுபலி என்ற ஒற்றை திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் ராஜமவுலி. அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் தற்போது ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து முடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக மட்டும் தயாரிப்பாளர் பல கோடிகள் செலவு செய்துள்ளார். இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.

வரும் ஜனவரி மாதம் உலக அளவில் வெளியிடப்படும் இந்த படம் பாகுபலியை விட அதிக வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் முடிந்ததையடுத்து ராஜமௌலி அடுத்தது எந்த மாதிரியான படத்தை எடுப்பார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தற்போது ராஜமவுலி மகாபாரதம் கதையை மிகவும் பிரம்மாண்டமாக இயக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரமோஷனில் கூறியுள்ளார். அடுத்த 10 மாதத்திற்குள் மகாபாரதத்தின் பணிகள் தொடங்க இருக்கிறது.

இப்போது தயாராகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் கூட மகாபாரதத்தின் தாக்கம் இருக்கும். மகாபாரதம் எடுக்கும் பொழுது அதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆருக்கு கூட கேரக்டர் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது இயக்குனர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக, அதிக பட்ஜெட்டில் எடுத்து வருகிறார். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் பட்ஜெட் மட்டும் 150 கோடியை தாண்டியுள்ளது. தற்போது ராஜமௌலி அடுத்ததாக இயக்க இருக்கும் மகாபாரதம், பொன்னியின் செல்வன் பட்ஜெட்டை விட அதிக பொருட்செலவில் உருவாக இருக்கிறது. இது நிச்சயம் உலக அளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Trending News