தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என நயன்தாராவை அழைப்பது போல் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகை என அழைக்கப்பட்டவர் தான் பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித். இவர் முதல் முறையாக அபோத் என்ற படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சில சிறிய மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்த மாதுரி தீட்சித்க்கு தேஜாப் என்ற படம் மூலம் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் இவரை ஒரு திரைநட்சத்திரமாக உயர்த்தியது. மேலும் இவர் இப்படத்தில் நடித்ததற்கான முதல் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதன் பின்னர் பல வெற்றிப்படங்களில் நடித்த மாதுரி தீட்சித் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகையாக உலாவந்தார்.
மாதுரி தீட்சித் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்த போது எந்த ஒரு பிராந்திய மொழிப் படத்திலும் நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கர் காதலன் மற்றும் இந்தியன் ஆகிய படங்களில் நடிக்கக் கேட்ட போதும் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
ஆனால் அவ்வளவு பிடிவாதமாக இருந்த அவர் ஒரே ஒரு தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்தார். அதுவும் ஒரு அறிமுக இயக்குனர் படத்தில். இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த காந்தி கிருஷ்ணா தனது முதல்படமாக என்ஜினியர் என்ற படத்தை இயக்கினார்.
அப்படத்தின் கதையைக் கேட்டு அரவிந்த் சாமிக்கு ஜோடியாக மாதுரி நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பாதியிலேயே கைவிடப்பட்டதால் அந்த படம் இன்று வரை ரிலீஸாக வில்லை. இதன் காரணமாக தமிழ் படங்களில் அவர் நடிக்காமலேயே போய் விட்டார்.