தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே அது இயக்குனர் ஷங்கரை தான் குறிக்கும். இவர் இயக்கும் படங்களின் பட்ஜெட் மட்டுமின்றி படமும் பிரம்மாண்டமாகவே காட்சியளிக்கும். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான சிவாஜி, எந்திரன், அந்நியன், ஐ ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன. மாறுபட்ட கதைக்களங்கள் கொண்டிருந்த படங்கள் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்திருந்ததால் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்த இயக்குனர் ஷங்கர் தனது இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார். இப்படத்தில் உலக நாயகன் என அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் நடித்து இருந்தார். எனவே இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமலை வைத்தே இயக்க முடிவு செய்த ஷங்கர் அதற்கான முயற்சியில் இறங்கினார்.
ஆனால் இப்படம் தொடங்கிய நாள் முதல் அடுக்கடுக்காக பிரச்சனைகள் உருவானது. முன்னதாக கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். அதன் பின்னர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
அந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசனும் தமிழக தேர்தலில் பிசியாக இருந்ததால் படப்பிடிப்பு இன்னும் தள்ளிச் சென்றது. இவை அனைத்தும் முடிந்த பின்னர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், சங்கர் திடீரென தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் இயக்கும் பணிகளை தொடங்கினார். இதனால் தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சங்கர் ஒருபுறம் புதிய படத்தை இயக்க சென்று விட, மற்றொருபுறம் நடிகர் கமல்ஹாசன் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இதற்கிடையில் இந்தியன்-2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்குமாறு தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனால் இந்தியன்-2 படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தன தற்போது இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்தியன்-2 பட தயாரிப்பு நிறுவனத்தினரை சந்தித்த இயக்குனர் ஷங்கர் ராம்சரண் படத்தை முடித்ததும், இந்தியன்-2 படப்பிடிப்பை தொடங்குவதாக உறுதி அளித்துள்ளாராம். இதனால் பட நிறுவனமும் அதை ஏற்று வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.