சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதையும் மீறி தன்னுடைய நடிப்புத் திறமையால் சில நடிகர்கள் அடித்தட்டில் இருந்து தற்போது முன்னணி நடிகர்களாக வந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஆரம்பத்தில் வாய்ப்புக்காக பல கொடுமைகளை சந்தித்துள்ளனர்.
அப்படித்தான் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டான் படம் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது. டாக்டர், டான் என தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் 100 கோடி வசூலை தாண்டி உள்ளார்.
விஜய், அஜித் போன்ற நடிகர்கள் பல வருடங்களாக இருந்து சினிமாவில் சாதித்த நிலையில் சில வருடங்களிலேயே சிவகார்த்திகேயன் அவர்களது இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் சின்னத்திரையில் இருந்த குறுகிய காலத்திலேயே இவ்வளவு வளர்ச்சியா என சிவகார்த்திகேயனைப் பார்த்து பொறாமைப்பட்ட சிலர் அவருக்கு பல கொடுமைகள் செய்துள்ளனர்.
பாலிவுட்டில் சுஷாந்த் சிங் எத்தகைய கொடுமைகளை அனுபவித்தாரோ அதற்கு ஒரு படி மேலாகவே சிவகார்த்திகேயன் அனுபவித்தார் என பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். சுஷாந்த் சிங் சின்னத்திரையில் இருந்து மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்ததால் சில பெரிய நடிகர்கள் பல வழிகளில் அவருக்கு மன உளைச்சலை கொடுத்துள்ளனர்.
அதிலிருந்து சுஷாந்த் சிங் மீள முடியாமல் தற்கொலை வரை சென்றார். ஆனால் சிவகார்த்திகேயன் படித்தவர், புத்திசாலி இதை எப்படி கையாள்வது என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்தது. ஆனால் சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை மாதிரி எந்த நடிகருக்கும் நடந்ததில்லை என்று தயாரிப்பாளர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சினிமாவில் தற்போதும் வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற திறமையான நடிகர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. அதிலிருந்து எப்படியோ சிவகார்த்திகேயன் தனது புத்திசாலித்தனத்துடன் தப்பித்த நிலையில் பல திறமையான நடிகர்கள் இதில் சிக்கியுள்ளனர்.