கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா நோய் தொற்று காரணமாக திரையரங்குகள் அனைத்தும் திறக்கப்படாமல் மூடப்பட்டு இருந்ததால் மக்கள் கிட்டத்தட்ட திரையரங்குகளை மறந்து விட்டார்கள் போலும். மக்களை போலவே திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவர்களின் படங்களை இணையத்திலும், ஓடிடியிலும் வெளியிட்டு பழகி விட்டார்கள் என்று தான் தோன்றுகிறது.
தற்போது கொரோனா நோய் தொற்று குறைவு காரணமாக 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த முறை இந்திய படங்களைவிட பெரும்பாலான ஹாலிவுட் படங்களே இந்திய திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன. உதாரணமாக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பெல் பாட்டம் படத்தை விட தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஷாங் – சி ஹாலிவுட் படம் இந்தியாவில் அதிக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தமிழில் வெளியான தலைவி, லாபம் போன்ற படங்களுமே வசூலில் மண்ணை கவ்வியது. மேலும் சேட்டிலைட், டிஜிட்டில், ஆடியோ, ஓடிடி என பலவகைகளில் வருமானம் வருவதால் தயாரிப்பாளர்கள் தியேட்டர் வெளியீட்டை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதன் காரணமாக தற்போது இந்திய திரையரங்குகள் முழுவதையும் ஹாலிவுட் படங்கள் ஆக்கிரமித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியா முழுவதும் சுமார் ஆயிரம் திரையரங்குகளில் ஒரே ஒரு ஹாலிவுட் படம் வெளியாக உள்ளது. அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற டோண்ட் ப்ரீத் படத்தின் இரண்டாம் பாகம் செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகும் இப்படத்தை கிட்டத்தட்ட ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்ப திரையரங்குகளும் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதவிர ஜங்கிங் க்ரூஸ், நோ டைம் டூ டை உள்பட ஏராளமான ஹாலிவுட் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. எனவே இந்தாண்டு திரையரங்கில் இந்தியப் படங்கள் சாதிப்பதைவிட ஹாலிவுட் படங்களே அதிக அளவு வசூல் சாதனை படைக்கும் என்பதே யதார்த்தமான உண்மையாக உள்ளது.