ஓய்வு என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்று. அனைத்து வீரர்களும் தன் ஓய்வு முடிவை எதிர்பார்த்து தான் விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு அது நன்றாக அமையும் மற்றும் சிலருக்கு ஏதாவது துரதிருஷ்டமான சம்பவங்களால் முடியும். அப்படி தன் கிரிக்கெட் வாழ்க்கையை மறக்க முடியாத சம்பவங்களால் முடித்துக்கொண்ட கிரிக்கெட் வீரர்களை பார்ப்போம்.
ஆன்ட்ரூ சைமன்ஸ்: சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர் என்று ஆன்ட்ரூ சைமன்ஸ் கூறலாம். ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் இவர். மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்ட போது இவருக்கும், சைமன்ஸ்க்கும் நிறைய வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அதுமட்டுமின்றி சைமன்ஸ் ஆஸ்திரேலிய அணியில் நடக்கும் குழு மீட்டிங்கிற்கு ஒழுங்காக வராததும் இவரை அணியில் இருந்து நீக்குவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
கெவின் பீட்டர்சன்: இங்கிலாந்து நாட்டில் இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பீட்டர்சன் கிரிக்கெட் விளையாடுவதற்கு தனக்கென்று ஒரு தனி பாணியை கொண்டவர். இவர் விளையாடிய காலத்தில் அணி தலைவராக செயல்பட்டவர் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் மற்றும் பயிற்சியாளர் ஆன்டி பிளவர். இவர்கள் இருவரிடமும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பீட்டர்சன் அணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
அம்பத்தி ராயுடு: உலக கோப்பை 2019 அணியில் இருந்து ஓரங்கட்டபட்டதால் அம்பத்தி ராயுடு தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தார். இவருக்கு பதிலாக இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு தனது அதிருப்தியை தெரிவித்து அணியை விட்டு விலகினார் ராய்டு.
சோயப் அக்தர்: பாகிஸ்தான் அணியின் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படுபவர் சோயப் அக்தர். அந்தஅதிவேக எக்ஸ்பிரஸ் போல வேகப்பந்து வீசுவதால் இவர் இப்பெயர் பெற்றார். இவர் விளையாடிய காலத்தில் அணி தலைவராக செயல்பட்ட சாகித் அப்ரிடி, அத்தர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்றும் இவருக்கு பதிலாக இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூறி வகாப் ரியாஸ் என்ற பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இவரை விலக்கினார். அதன் பின்னர் சோயப் அக்தர் பாகிஸ்தான் அணியை விட்டும் விலகினார்.
கௌதம் கம்பீர்: 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்தவர் கௌதம் கம்பீர். இவர் மிகவும் ஒரு ஆக்ரோஷமான வீரர். எளிதில் உணர்ச்சி வசப்பட்டு கோபப்படக் கூடிய ஒருவர். தோனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.