வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சூப்பர் ஸ்டாராக நடிக்கும் துல்கர் சல்மான்.. விடை தெரியாத பல வருட மர்மம் விலகுமா.?

Dulquer Salmaan: மலையாள நடிகராக இருந்தாலும் துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லக்கி பாஸ்கர் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையும் நடத்தியது.

அதை அடுத்து தமிழில் இப்போது அவர் காந்தா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இது ஒரு பயோபிக் படமாகும். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையுடன் இருக்கும் எம் கே தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு தான் இந்த காந்தா.

அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை என்றாலும் இது உறுதியான செய்திதான். துல்கர் சல்மானுடன் இணைந்து இப்படத்தில் ராணா டகுபதி, சாய்பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.

கர்நாடக சங்கீத பாடகரான தியாகராஜ பாகவதர் 15 படங்களில் நடித்திருக்கிறார். அதில் இவர் நடித்த ஹரிதாஸ் என்ற படம் மூன்று ஆண்டுகள் ஒரே தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது.

சூப்பர் ஸ்டார் ஆக நடிக்கும் துல்கர் சல்மான்

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த இவர் ஒரு கொலை வழக்கில் சிக்கியது தான் இவருடைய சரிவின் ஆரம்பம். பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தியாகராஜ பாகவதர் என் எஸ் கிருஷ்ணன் இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதில் ஸ்ரீராமுலு நாயுடு விடுவிக்கப்பட்டு மீதி இருவரும் சிறை தண்டனை பெற்றனர். கிட்டத்தட்ட நான்கு வருட சிறைவாசத்திற்கு பிறகு மேல்முறையீடு செய்து குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுதலை செய்யப்பட்டனர்.. இருப்பினும் இந்த வழக்கில் யார் குற்றவாளி என இப்போது வரை விடை தெரியவில்லை.

அதன் பிறகு தியாகராஜ பாகவதர் சில படங்களை தயாரித்து நடித்தாலும் முன்பிருந்த மவுசு அவருக்கு கிடைக்கவில்லை. அத்துடன் விரக்தி அடைந்த நிலையில் அவர் ஆன்மீகப் பக்கம் தன் மனதை திசை திருப்பினார்.

இருப்பினும் மனதளவில் சோர்ந்து போன அவர் உடல் நலக்குறைவின் காரணமாக 49 வயதிலேயே மரணம் அடைந்தார். அவரைப் பற்றிய காவியமாக தான் காந்தா உருவாக இருக்கிறது. இந்த படத்தில் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் நடந்தது என்ன? யார் மீது தவறு? என விரிவாக காட்டப்பட வாய்ப்பு இருக்கிறது.

இதன் மூலம் பல வருடங்களாக விடை தெரியாத மர்மமும் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே துல்கர் சாவித்திரியின் பயோபிக் படத்தில் ஜெமினியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News