இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 22ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. படம் வெளியான நாள் முதல் இன்றுவரை பல திரைப்பிரபலங்கள் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இயக்குனர் ரஞ்சித் மற்றும் ஆர்யாவிற்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இப்படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் குறிப்பிட்டு கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் அதிகம் கவனம் ஈர்த்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்து, சென்னையில் படித்து வளர்ந்த பெண் என்பது கூடுதல் சிறப்பு.
இதன் காரணமாகவோ என்னவோ வடசென்னை பாஷையை பிசுறு தட்டாமல் பேசி, வசனங்களையும், உணர்ச்சிகளையும் உள்வாங்கி நடித்திருந்தார். கோபம், அழுகை, பாசம், காதல் என ஒவ்வொரு உணர்வுகளையும் துல்லியமாக வெளிப்படுத்தியிருந்தார். இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆரம்பத்தில் இந்த படத்திற்கு சிலர் தன்னை வேண்டாம் என நிராகரித்த போதும் பா.ரஞ்சித் தன் மீது நம்பிக்கை வைத்து நடிக்க வைத்ததாக கூறி தன்னுடைய நன்றிகளை உணர்வு பூர்வமான வார்த்தைகளால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதுவும் தமிழில் பதிவு செய்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “எல்லா கனவுகளும் நிஜம் ஆகுமான்னு என்ன கேட்டா எனக்கு தெரியாது, ஆனா ஜூலை 22, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம் ஆகிருச்சு. சார்ப்பட்டாவின் வெற்றி இது. என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாத வெற்றி!
குடுத்த வேலைய ஒழுங்கா பன்னிருக்கேன்னு மனசுக்கு நிம்மதியாவும், சந்தோஷமாவும் இருக்கு. மாரியம்மா என் வாழ்க்கைல ரொம்ப சந்தோஷத்த தந்திருக்கா, எல்லாரும் அவள கொண்டாடுறத அவ்வளவு அழகா என்ன ஃபீல் பன்ன வச்சுட்டா. எல்லாரும் இந்த பொண்ணு வேணாம்னு சொன்னப்ப இவதான் மாரியம்மானு ஆணி தனமா நம்புன ரஞ்சித் ஐய்யாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது. எல்லாருக்கும் ஒரு சின்ன நம்பிக்கை போதும், எத வேணும்னாலும் பன்னிரலாம்.
அப்படி ஐயா நம்பி, நான் உயிர் குடுத்தவ மாரியம்மா. நான் ரொம்ப விரும்பி மாரியம்மாவா நடிச்சேன். முதல் பெரிய படம், நீங்க ஒவ்வொருத்தரும் வாழ்த்துகள் சொல்லும்போது ரொம்ப மெய் சிலிர்க்குது, ரொம்ப பயமும் வருது. பெரிய நன்றி எல்லாருக்கும் மாரியம்மாவ சரியான வகைல புரிஞ்சுகிட்டதுக்கு.
படத்துல என் கூட நடிச்ச எல்லாருக்கும் நன்றி மட்டும் சொன்னா பத்தாது. கபிலன் எனக்கு ஒரு பெரிய உறுதுணையா இருந்தாரு. படத்துல நடிச்ச எல்லாருமே அவங்க நடிப்பு கொண்டாடப்படனும்னு தான் நடிச்சு இருக்கோம். துணை எழுத்தாளர் தமிழ் பிரபா அண்ணனுக்கு ரொம்ப நன்றி சொல்லனும், அவ்வளவு சரளமாக நான் வடசென்னை பேச்சு வழக்கு பேசுறதுக்கு அவர் ஒரு முக்கிய காரணம்” என கூறியுள்ளார்.