லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது இந்திய அணி. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.
இந்த போட்டியின் ஐந்தாம் நாளான நேற்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 298 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்த போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் பும்ரா மற்றும் முகமது சமி இருவரும் அபாரமாக விளையாடினார்கள். சமி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். இருவரும் 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து வீரர்கள் மார்க் வுட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் பும்ராவிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டத்தின் நடுவே பரபரப்பு ஏற்பட்டது.
எப்படியாவது சமி மற்றும் பும்ரா இருவருக்கும் காயத்தினை விளைவிக்கும் வகையில் ஆக்ரோசமாக பந்து வீசி வம்பு இழுத்தனர் இங்கிலாந்து அணி. இதனை மனதில் வைத்த விராட் கோலி இந்திய அணி பந்து வீசுகையில் வீரர்களிடம் மீதமுள்ள 60 ஓவர்களும் அவர்களுக்கு நரகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட வேண்டும் என்று காட்டமாக பேசியுள்ளார். இதனால் களத்தில் அனல் பறந்தது, இறுதியில் இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு இந்திய அணி பந்துவீச்சாளர்களிடம் சரண்டர் ஆனது.