சிறைச்சாலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 5 படங்கள்
Best Movies Based On Prisons: தமிழ் சினிமாவிற்கு எத்தனையோ கதைகளத்தை கொண்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சிறைச்சாலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 5 படங்கள் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் ஜெய் பீம் லாக்கப் மரணத்தை கண் முன் காட்டி பதைபதைக்க வைத்தது.
ஒரு கைதியின் டைரி: பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரேவதி நடிப்பில் வெளியான படம் தான் ‘ஒரு கைதியின் டைரி’. 175 நாட்கள் வரை திரையரங்கில் வசூலில் சக்கை போடு போட்ட இந்த படம், சிறைச்சாலையை வைத்து மையமாகக் கொண்டு திரைக்கதை அமைந்த படம். இதில் சூரிய பிரகாஷ் என்ற அரசியல்வாதிக்கு விசுவாசமாக இருந்த டேவிட்டின் மனைவியை பலாத்காரம் செய்து கொன்று, டேவிட்டையும் சிறைக்கு அனுப்பி விடுவார்கள். ஆயுள் தண்டனையை அனுபவித்துவிட்டு சூரிய பிரகாசை பழிவாங்க வேண்டும் என்று சிறையிலிருந்து திரும்பும் ஒரு கைதியின் கதை தான் இந்த படம்.
சிறைச்சாலை: இந்திய விடுதலை போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் மோகன்லால், பிரபு, தபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் மோகன்லால், பிரபு இருவரும் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கொடுமையான சிறைவாசம் அனுபவிப்பார்கள். அதிலும் ஆங்கிலேயருக்கு அடங்க மறுக்கும் இவர்களது முதுகில் அயன் பாக்ஸை வைத்து தோளோடு சுட்டு எடுக்கும் கொடுமை எல்லாம் நடக்கும்.
இவர்கள் ஆங்கிலேயரின் பிடியில் சிக்கிக் கொண்டு அடிமைகளாக வாழ முடியாமல் அடம் பிடிக்கும் போது அவர்கள் வாங்கும் அடி, படத்தைப் பார்ப்போருக்கே விழும் அடி போன்று பதைப்பதைக்க வைக்கும். இப்போது நாம் சுதந்திர பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் இந்த படத்தில் ஆங்கிலேயர்களின் சித்திரவதையில் மாட்டிக்கொண்டு தங்கள் உயிரை மாய்த்து கொண்ட பலருடைய தியாகம் தான் என்பதை இந்த படம் காட்டியிருக்கும். மேலும் இந்த படம் முழுக்க முழுக்க ஆங்கிலேயர் சிறையை கண் முன் காட்டி பயமுறுத்தி இருக்கும்.
மகாநதி: இந்த படத்தில் 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதியாக கமல் நடித்திருப்பார். சிறைக்கு சென்ற பின், நிற்கதியாய் நிற்கும் அவருடைய மகள் மற்றும் மகன் இருவரும் பாதை மாறி எந்த அளவிற்கு சித்திரவதையை அனுபவித்தனர் என்பதை காட்டுகிறார். அதிலும் இவரது மகளை வசதி படைத்தவர் அனுபவித்து விட்டு மும்பைக்கு அனுப்பி விடுவார். மகன் தெருக்கூத்து ஆடுபவர்களுடன் சேர்ந்து உயிர் பிழைப்பார். கடைசியில் ஆயுள் தண்டனையை அனுபவித்த பின் கமல் திரும்பி வந்து தன்னுடைய மகள் மற்றும் மகனை மீட்டெடுப்பது தான் இந்த படத்தின் கதை. ஒரு சிறை கைதியின் வாழ்க்கை மற்றும் அவர்களது குடும்பம் எந்த அளவிற்கு சீரழிந்து போகிறது என்பதை இந்த படத்தில் காட்டியிருப்பார்கள்.
விசாரணை: சந்திரகுமாரின் உண்மையான அனுபவத்தில் இருந்து எழுதப்பட்ட லாக்கப் நாவலின் மூலம் படமாக்கப்பட்ட விசாரணை படத்தில் இடம்பெற்ற பெரும்பாலான காட்சிகள் நிஜ வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்த படம் ஆஸ்கார் விருதுக்கே பரிந்துரைக்கப்பட்டது. அந்த அளவிற்கு தரமான படமாக வெற்றிமாறன் இந்த படத்தை எடுத்திருப்பார். முழுக்க முழுக்க போலீஸ் ஸ்டேஷன், லாக்கப் என இந்த படத்தில் கதை அமைந்திருக்கும். எந்த தப்பும் செய்யாத 4 இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் கைது செய்து அவர்களை சித்திரவதை செய்து போலீசார் கொன்றுவிடுவார்கள். இந்தப் படத்தை பார்க்கும் போதே பதைபதைக்க வைக்கும். ஏனென்றால் இந்த படத்தில் போலீஸ் கைதிகளை அடிக்கும் ஒவ்வொரு அடியும் படத்தை பார்ப்போர் மேல் விழுவது போன்ற உணர்வு ஏற்படும்.
ஜெய் பீம்: 1993 ஆம் ஆண்டு ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ஜெய் பீம். இதில் இருளர் சாதியை சேர்ந்த செங்கேணி மற்றும் ராஜாக்கண்ணு தம்பதியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை காட்டி இருப்பார்கள். ராஜாக்கண்ணு திட்டமிட்டு காவலர்களால் தாக்கப்பட்டு செய்யாத தப்பை ஒப்புக்கொள்ள வற்புறுத்தப்படுகிறார். பின் காவல் நிலையத்தில் அவர் காணாமல் போனதாக போலீசார் பொய் கூறுவதால், செங்கேணி தனது கணவருக்கு நீதி கிடைக்க வழக்கறிஞர் சந்துருவிடம் உதவியை நாடுகிறார். அதன் பின்பு தான் ராஜாகண்ணு லாக்கப்பில் அடித்து கொலை செய்யப்பட்ட உண்மை தெரிய வருகிறது. சமீப காலமாக லாக்கப் மரணம் தொடர்கதை ஆகிறது. ஆனால் அந்த லாக்கப் மரணத்தை ஜெய்பீம் கண் முன் நிறுத்தி இருக்கும்.
