கல்யாணம் ஒரு மேட்டரே இல்ல என சாதித்துக் காட்டிய நடிகைகள்.. 30 படங்களில் நடித்த ஒரே ஹீரோயின்

பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோக்களை விட, ஹீரோயின்கள் நீண்ட காலம் நீடித்திருப்பது என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. தோற்றத்தில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலே வாய்ப்புகள் பட்டென குறைந்து விடும். இதனால் தான் பல ஹீரோயின்கள் மார்க்கெட் இருக்கும் போதே நன்றாக சம்பாதித்து விட்டு, வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுகிறார்கள்.

ஹீரோயின்கள் திருமணம் செய்து விட்டால் அதோடு சினிமா வாய்ப்பு அதுவும் கதாநாயகி வாய்ப்பு என்பதெல்லாம் கனவில் கூட நடக்காத காரியம். அக்கா, அண்ணி, அம்மா, சப்போர்டிங் ரோல் என போய் விட வேண்டியது தான். அதிலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் சின்னத்திரையில் தஞ்சம் அடைந்து விடுவார்கள்.

இதில் விதிவிலக்காக திருமணத்திற்கு பின் ஹீரோயின் ரோல் பண்ணுவது இப்போதைக்கு நயன்தாரா மற்றும் சமந்தா மட்டும் தான். இந்த நவீன காலத்திலேயே இந்த விஷயம் குதிரைக்கொம்பாக இருக்க 60களிலேயே இந்த இலக்கணத்தை உடைத்து புதுமை படைத்து இருக்கிறார்கள் அன்றைய ஹீரோயின்கள். திருமணத்திற்கு பின் 20, 30 படங்களில் கூட ஹீரோயின்களாக நடித்த நடிகைகள் எல்லாம் இருக்கின்றார்கள். கல்யாணம் ஆகியும் சினிமாவில் அதிக படங்களில் நடித்த நடிகைகள்:

பத்மினி: 1949 ஆம் ஆண்டு வாழ்க்கை என்னும் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை பத்மினி. இவரது நடன திறமையால் இவரை எல்லோரும் நாட்டிய பேரொளி என்று அழைத்தனர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். இவரது நடிப்பிற்கு மிக சிறந்த உதாரணமான படம் என்றால் அது தில்லானா மோகனாம்பாள் தான்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினிக்கும், வைஜெயந்தி மாலாவிற்கும் நடக்கும் நடனப்போட்டி இன்றளவிற்கும் ரசிக்கப்படும் காட்சிகளில் ஒன்று. இவர் 1961 ஆம் ஆண்டு டாக்டர் ராமச்சந்திரன் என்பவரை மணந்தார். திருமணத்திற்கு பிறகும் பத்மினி 9 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நிலைத்திருந்தார். இந்த 9 வருடங்களில் 30 படங்களில் நடித்திருந்தார்.

சரோஜாதேவி: கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என அன்போடு அழைக்கப்படுபவர் சரோஜாதேவி. இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில் இருந்து 200 படங்கள் வரை நடித்திருக்கிறார். 17 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நிலைத்து நின்றவர். சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருக்கிறார். 1967 ல் திருமணத்திற்கு பின் தன்னுடைய கணவரின் ஆதரவோடு 20 படங்களில் ஹீரோயினாக நடித்தார்.