ஆங்கிலம் கலக்காத தமிழ் சினிமா சாத்தியமா? சீமானின் அசாத்திய முயற்சி
தமிழ் திரையுலகின் 75 ஆண்டுகால வரலாற்றில், வரலாற்றுப் பின்னணி இன்றி, சமகாலக் கதையில் ஒரு ஆங்கில வார்த்தை கூடப் பயன்படுத்தாமல் எடுக்கப்பட்ட ஒரே திரைப்படம்.
75 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில், பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. காலப்போக்கில் தமிழ் மொழியில் ஆங்கிலக் கலப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால், வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படங்களைத் தவிர்த்து, சமகாலக் கதையைச் சொல்லும் ஒரு திரைப்படத்தில் ஒரு ஆங்கில வார்த்தை கூடப் பயன்படுத்தாமல் முழுத் திரைப்படத்தையும் உருவாக்கி வியக்க வைத்துள்ளார் இயக்குனர் சீமான்.
ஒரு ஆங்கில வார்த்தை கூட இடம் பெறாமல் படம் எடுப்பது என்பது மிகப்பெரிய சவால். அந்தச் சவாலை 2008-ல் முறியடித்து சாதனை படைத்தது இயக்குனர் சீமானின் 'வாழ்த்துகள்' திரைப்படம்.
இயக்குனர் சீமான், தனது மொழிப்பற்றை திரையில் ஆணித்தரமாகப் பதிவு செய்ய விரும்பினார். அதன் விளைவாக, இப்படத்தின் வசனங்கள் மட்டுமின்றி, படத்தின் பெயர்கள், பாடல்கள் என அனைத்திலும் தூய தமிழைப் பயன்படுத்தினார். உதாரணமாக, பொதுவாகப் பயன்படுத்தப்படும் 'மம்மி', 'டாடி', 'தேங்க்ஸ்', 'லவ்' போன்ற எளிய ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக 'அன்னை', 'தந்தை', 'நன்றி', 'அன்பு' போன்ற சொற்களே பயன்படுத்தப்பட்டன.
இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களான மாதவன் மற்றும் பாவனா இணைந்து நடித்திருந்தனர். மாதவன் ஒரு மென்பொருள் பொறியாளராக நடித்திருந்தாலும், அவர் பேசும் தமிழ் வசனங்கள் இயல்பாகவும், அதேசமயம் தூய்மையாகவும் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், உறவுகளுக்கு இடையே இருக்க வேண்டிய புரிதலையும் மையமாக வைத்து இக்கதை நகர்கிறது.
படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் மிகத் தூய்மையான தமிழில் செதுக்கப்பட்டிருக்கும். இயக்குனர் சீமான் இதற்காகத் தனி கவனம் செலுத்தியுள்ளார். பாடல்களிலும் அந்நிய மொழிச் சொற்கள் கலக்காமல், கவிஞர் நா. முத்துக்குமார் மற்றும் பா. விஜய் ஆகியோர் இலக்கியத் தரமான வரிகளை வழங்கியுள்ளனர்.
குடும்ப உறவுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட இந்தக் கதையில், நவீன காலக்கட்டத்தில் வாழும் மனிதர்கள் எப்படித் தூய தமிழில் பேச முடியும் என்பதை இது நிரூபித்தது.
வரலாற்றுத் திரைப்படங்கள் அல்லது புராணப் படங்களில் தூய தமிழ் பேசுவது இயல்பானது. ஆனால், ஜீன்ஸ் மற்றும் டீ-சர்ட் அணிந்த நவீன இளைஞர்கள் நடிக்கும் ஒரு சமகாலத் திரைப்படத்தில், ஒரு சிறு ஆங்கிலச் சொல் கூடப் பயன்படுத்தாமல் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் படத்தை நகர்த்துவது மிகப்பெரிய சவாலாகும். இந்தச் சாதனையைத் தமிழ் சினிமாவில் நிகழ்த்திய ஒரே திரைப்படம் 'வாழ்த்துக்கள்' மட்டுமே.
சமூக வலைதளங்களில் இந்தப் படம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது பகிரப்பட்டாலும், இன்றைய தலைமுறைக்குத் தமிழ் மொழியின் அழகையும் செழுமையையும் உணர்த்தும் ஒரு படைப்பாக இது இன்றும் நிலைத்து நிற்கிறது.
