19 கோடி பட்ஜெட்டில் உருவான தமிழ் திரைப்படம் ஒன்று, 75 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் 890 நாட்கள் திரையில் ஓடி உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது. கிட்டத்தட்ட 17 வருடங்களாக இந்த படத்தின் சாதனையை வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை.
1992 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில், P வாசு இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, விஜயசாந்தி, பண்டரிபாய் நடித்த திரைப்படம் மன்னன். இந்த படத்தை நடிகர் பிரபு, சிவாஜி ப்ரொடக்சன் கீழ் தயாரித்தார். இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் சிவாஜி ப்ரொடக்சனின் 50 வது படத்தில் நான் நடிப்பேன் என்று வாக்கு கொடுத்தார்.
2004 ஆம் ஆண்டு P வாசு கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா’ என்னும் படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த வெற்றிக்காக வாசுவை பாராட்டிய ரஜினி, அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். வாசு, ரஜினிக்காக திரைக்கதையை கொஞ்சம் மாற்றி ‘சந்திரமுகி’ என்னும் பெயரில் சிவாஜி புரொடக்சன் தயாரிப்பில் 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ரஜினியின் இந்த படம் தான் 890 நாட்கள் ஓடி கின்னஸ் சாதனை படைத்தது.
சந்திரமுகி படத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் நடித்திருந்தனர். இந்த படம் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீசானது. போஜ்புரி மொழியில் சந்திரமுகி கெ ஹுன்கார் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. ஜெர்மனியில் மொழிபெயர்க்கப்பட்டு ரிலீசான முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும்.
இந்த படம் ஜோதிகாவின் சினிமா வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் ஜோ பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் இந்த படம் பிலிம்பேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், கலைமாமணி விருது, 55வது ஆண்டு திரைப்பட ரசிகர்கள் சங்க விருது போன்ற விருதுகளை அள்ளியது.
சந்திரமுகி படத்துடன், கமலின் மும்பை எக்ஸ்பிரஸும், விஜயின் சச்சினும் சேர்ந்து ரிலீஸ் ஆனது. இந்த 2 படங்களுமே வெற்றியடையவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக தியேட்டரில் ஓடிய படம் என்பதால் கின்னஸ் சாதனை படைத்தது.