80, 90 களின் காலத்தில் நடித்த நடிகைகள், கோலிவுட்டின் மிகப்பெரிய தூணாக இருந்தவர்கள். பாரதிராஜா, பாலச்சந்தர், பாலு மஹிந்திரா போன்ற இயக்குனர்களின் நடிப்பு பட்டறையில் தீட்டப்பட்ட நடிப்பு வாள்கள் என்றே சொல்லலாம். சுஜாதா, ஸ்ரீதேவி, சரிதா, சுஹாசினி போன்றவர்கள் நடித்து கொண்டிருந்த காலத்தில் சினிமாவுக்கு வந்தவர் தான் ராதிகா.
ராதிகா ‘நடிக வேள்’ MR ராதாவின் மகள், அயல்நாடுகளில் பயின்றவர். இவருடைய முதல் படமே இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் நடிக்கும் போது ராதிகாவுக்கு நடிக்கவும் தெரியாது, நடனமும் தெரியாதாம். ஆனால் அடுத்தடுத்து ராதிகா நடித்த படங்கள் அனைத்தும் அவரை வேறு ஒரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றன. கோலிவுட்டின் தன்னிகரில்லா நாயகி ஆனார். ராதிகாவின் முக்கியமான 6 கேரக்டர்கள்
ஜீன்ஸ்: ஜீன்ஸ் 1998 ஆம் வெளியான திரைப்படம். அமெரிக்காவில் படு மாடர்னாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் காரைக்குடி பிளாஷ்பேக்கில் நாசருக்கு மனைவியாக வருபவர் தான் சுந்தராம்பா. ராதிகாவின் இந்த கேரக்டரை யாராலும் மறக்க முடியாது. அப்பாவியாக இருக்கும் கணவரை மிரட்டும் மனைவியாக வாழ்ந்து இருப்பார். இவர் பேசிய ‘உனக்கு ஆடு வாங்கியார தெரியாது’ என்னும் வசனமே இந்த படத்தில் இவருக்கான அடையாளமாக மாறியது.
தாஜ் மஹால்: இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில், மனோஜ் நடிப்பில் வெளியான தாஜ் மஹால் திரைப்படத்தில், மனோஜின் அத்தையாக ராதிகா நடித்திருப்பார். கசங்கிய கண்டாங்கி புடவை, இடுப்பில் டம்ளர், வெற்றிலை வாய் என அச்சு அசல் கிராமத்து கதாபாத்திரத்தில் பொருந்தி இருப்பார். குடித்துவிட்டு ரேவதியுடன் சண்டையிடும் காட்சிகள் இவரது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும்.
நானும் ரவுடி தான்: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் அம்மாவாக நடித்திருப்பார். மகனின் மீது அதீத அன்பு கொண்ட அம்மாவாக வருவார்.
வீரத்தாலாட்டு: இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம். இதில் ராதிகா, ராஜ்கிரணுக்கு மனைவியாகவும், முரளிக்கு அம்மாவாகவும் நடித்திருப்பார். ராஜ்கிரணின் கொலைக்காட்சியில் தைரியமான பெண்ணாக நடித்திருப்பார்.
கிழக்கு சீமையிலே: ‘பாச மலர்’ திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வந்த அண்ணன்-தங்கை பாச திரைப்படம் என்றால் அது கிழக்கு சீமையிலே . இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் விஜயகுமார், நெப்போலியன், ராதிகா, விக்னேஷ், வடிவேலு நடித்த திரைப்படம். இதில் அண்ணனின் மீது அதிக பாசம் கொண்ட தங்கையாகவும், கணவனை மீறாத மனைவியாகவும் அழகாக நடித்திருப்பார்.
பாச பறவைகள்: 1988 ஆம் ஆண்டு சிவகுமார், ராதிகா, மோகன், லட்சுமி நடித்த இந்த திரைப்படத்தில் , ராதிகா சிவகுமாரின் தங்கையாக நடித்திருப்பார். கலைஞரின் வசனங்களை நீதிமன்ற காட்சிகளில் சிறப்பாக பேசி நடித்திருப்பார்.