12 வருடங்களில் ஐந்து முறை நேருக்கு நேராக மோதிய தனுஷ், கார்த்தி.. அதிகமா கல்லா கட்டியது யார் தெரியுமா?

கார்த்தியின் நடிப்பில் விருமன் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படமும் தற்போது நல்ல லாபம் பார்த்து வருகிறது. அந்த வகையில் இப்போது தனுஷ் மற்றும் கார்த்தி இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

இந்த நேருக்கு நேர் மோதல் இது முதல் தடவை கிடையாது. இதற்கு முன்பே இவர்கள் இரண்டு பேரின் திரைப்படங்களும் நேருக்கு நேர் மோதி இருக்கிறது. அந்தத் திரைப்படங்கள் என்ன என்பதைப் பற்றியும், வசூல் நிலவரம் பற்றியும் இங்கு காண்போம்.

குட்டி – ஆயிரத்தில் ஒருவன்: கடந்த 2010 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் படம் பல சாதனைகள் புரிந்தது. வரலாற்று திரைப்படமாக வெளிவந்த அந்த திரைப்படம் 18 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவானது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 25 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. அந்த வகையில் தனுஷின் குட்டி திரைப்படம் ஒரு ஆவரேஜ் திரைப்படமாக பார்க்கப்பட்டது.

ஆடுகளம் – சிறுத்தை: 2011 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த இரண்டு படங்களும் ரசிகர்களை கவர்ந்தது. அதில் கார்த்தியின் சிறுத்தை திரைப்படம் 13 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு 30 கோடி ரூபாய் வரை வசூல் லாபம் பார்த்தது. தனுஷின் ஆடுகளம் 10 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு 30 கோடி வசூலித்தது. மேலும் தனுசுக்கு தேசிய விருது உட்பட பல விருதுகளும் கிடைத்தது. அந்த வகையில் இந்த இரண்டு படங்களும் வசூலில் சமநிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கொடி – காஷ்மோரா: 2016 அக்டோபர் மாதம் வெளியான இந்த இரண்டு படங்களில் கார்த்தியின் காஷ்மோரா 60 கோடி ரூபாய் வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை கலக்கியது. தனுஷின் கொடி திரைப்படம் 50 கோடி ரூபாய் வரை வசூலித்து ஒரு வெற்றி திரைப்படமாக ரசிகர்களை கவர்ந்தது. இதில் மற்றொரு ஒற்றுமை என்னவென்றால் இந்த இரண்டு படங்களிலும் ஹீரோக்கள் இரட்டை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தனர்.

கர்ணன் – சுல்தான்: கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியான இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் கார்த்தியின் சுல்தான் திரைப்படம் 55 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அதற்கு நேர் மாறாக தனுஷின் கர்ணன் திரைப்படம் 105 கோடி ரூபாய் வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை கலக்கியது. அந்த வகையில் தனுஷ் இந்த ரேஸில் வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சிற்றம்பலம் – விருமன்: சமீபத்தில் வெளியான இந்த இரண்டு படங்களுக்கும் இடையே தற்போது கடும் போட்டி இருக்கிறது. அதில் விருமன் திரைப்படம் 10 நாட்களை கடந்து 50 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

ஆனால் தனுஷின் திருச்சிற்றம்பலம் வெளியான 5 தினங்களுக்குள்ளாகவே 40 கோடியை நெருங்கி உள்ளது. அந்த வகையில் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் தனுஷ் மற்றும் கார்த்தி இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர்.