புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் ஆண்டவர்.. விழாவை தொகுத்து வழங்கப் போகும் பிரபலம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படம் தொடர்பாக வெளிவரும் அப்டேட்களும் கமல் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. துபாயில் நடைபெறுவதாக இருந்த இந்த விழா தற்போது சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.

கமலின் நடிப்பில் படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரின் திரைப்படம் திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் திரைப்படத்தின் டிரைலரும் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த விழாவில் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி திரை நட்சத்திரங்களும் அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

அதனால் இன்று காலை முதலே சமூக வலைத்தளங்களில் விக்ரம் பட ஆடியோ லான்ச் குறித்து பல பரபரப்பான விஷயங்கள் வெளியாகி வருகிறது. மேலும் ஒரு சர்ப்ரைஸ் ஆக பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிடி தொகுத்து வழங்கியிருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு டிடி மீண்டும் கமல் நடித்துள்ள திரைப்பட விழாவை தொகுத்து வழங்க இருக்கிறார். ஆனால் தற்போது அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News