நீண்ட நாட்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த பிரபல காமெடி நடிகர் தற்போது சூர்யா மற்றும் பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் சூர்யா 40 படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா சூரரைப்போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
சூர்யா 40 படத்திற்கான பூஜை இன்று நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இசையமைப்பாளராக டி இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாக இருக்கும் சூர்யா 40 படத்திற்கு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம் ஆகியுள்ளன.
இந்நிலையில் அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் வகையில் ஐந்தாவது முறையாக பிரபல காமெடி நடிகருடன் சூர்யா கூட்டணி அமைக்க உள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை. நம்ம வைகைப் புயல் வடிவேலு தான். தற்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாம்.
ஏற்கனவே சூர்யா மற்றும் வடிவேலு கூட்டணியில் வெளிவந்த ஆறு, வேல், சில்லுனு ஒரு காதல், ஆதவன் போன்ற படங்களில் காமெடி களைகட்டியது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் கண்டிப்பாக காமெடி சரவெடியாக இருக்கும் என நம்பலாம்.