தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களின் மூலம் திரைப்படக்கலை பயின்றவர் தான் கே பாக்யராஜ்.
இவர் தமிழ் திரையுலகில் நடிகர், திரைக்கதை அமைப்பாளர், வசன எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் என பன்முக திறமைகள் கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்தார். ஒரு சில காட்சிகளில் திரைப்படங்களில் தோன்றி மறைந்த பாக்கியராஜ், புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமின்றி ஹீரோவாக அறிமுகம் செய்தார்.
அதன் பிறகு 1979ஆம் ஆண்டு வெளியான சுவரில்லா சித்திரங்கள் என்ற படத்தை முதல் முதலாக பாக்யராஜ் இயக்கினார். மேலும் கன்னிப்பருவத்திலே என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடித்ததன் மூலம் தனது வித்தியாசமான கோணத்தை வெளிக்காட்டினார்.
அதன் பின், ஒரு கை ஓசை என்ற படத்தை தயாரித்து அதன்மூலம் தமிழ் சினிமாவில் ஆழமாக காலூன்றினார். அத்துடன் பாக்யராஜ் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் நெகடிவ்வான செண்டிமெண்ட் டைட்டில் வைத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
அந்த வகையில் இவருடைய தூறல் நின்னு போச்சு, மௌனகீதங்கள், ஒரு கை ஓசை, சுவரில்லாத சித்திரங்கள், பொய் சாட்சி, இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, டார்லிங் டார்லிங், அந்த 7 நாட்கள் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களால் போற்றப்பட்ட திரைப்படங்கள் ஆகும்.
அத்துடன் பாக்யராஜ் கையாண்ட முருங்கைக்காய் போன்ற சில விஷயங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. பொதுவாக இவர் உருவாக்கும் அனைத்து திரைப்படங்களையும் 40 நாளில் 80 சதவீத படங்களை எடுத்து முடித்து விடுவாராம் அதுவே இவருடைய தனிச்சிறப்பாக பார்க்கப்பட்டது.