சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தரமான அரசியலைப் பேசும் மாநாடு.. சிம்பு, SJ சூர்யாவை புகழ்ந்து தள்ளிய பிரபலம்

மக்களின் அமோக வரவேற்புடன் வெற்றி நடை போட்டு வருகிறது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம். இத் திரைப்படம் குறித்து பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பிரபல அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் தலைவரும், இயக்குனருமான சீமான் அவர்கள் மாநாடு திரைப்படத்தை பற்றி புகழ்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது மாநாடு திரைப்படத்தை கண்டு களித்தேன்.

மாறுபட்ட திரைக்கதை மற்றும் விறுவிறுப்பு குறையாத காட்சி அமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றும் செய்கிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை மிக்க படைப்பாக இத்திரைப்படத்தை தந்திருக்கிறார் தம்பி வெங்கட் பிரபு என்று புகழ்ந்துள்ளார்.

மேலும் இஸ்லாமியர்கள் குறித்து பரப்பப்படும் செய்திகளை கேள்விக்குள்ளாக்கி, கோவை கலவரத்தின் போது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பற்றி பேசி, அவர்களை பற்றி இருக்கும் தவறான பிம்பத்தை தகர்த்தெறியும் விதத்திலான வசனங்களும் காட்சிகளும் இப் படத்தின் சிறப்பம்சம் ஆகும்.

இதுதவிர தம்பி சிலம்பரசன் அவர்களின் துடிப்பான நடிப்பும், வசன உச்சரிப்பும், உடல் மொழியாலும் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒருமுறை முத்திரை பதித்திருக்கிறார். கலை பயணத்தில் அவரது வளர்ச்சியும், உயரத்தையும் கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அன்புச் சகோதரன் எஸ் ஜே சூர்யா அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தை தாங்கியிருந்தாலும் தனக்கே உரித்தான மொழிநடையும், எவரையும் சுண்டி இழுக்கும் வகையிலான நடிப்புத் திறனால் படத்தை தாங்கி நிற்கிறார். அவர் திரையில் தோன்றி நடிக்கும் காட்சிகளை நான் பெரிதும் ரசித்தேன் என்றும் படத்தை தாங்கிப் பிடித்த மற்ற கதாபாத்திரங்களை பற்றியும் பாராட்டியுள்ளார்.

மாநாடு படம் காலத்துக்கேற்ற அரசியலைப் பற்றி பேசும் சிறந்த படைப்பாகவும், மாறுபட்ட திரைக்கதை அமைப்பு கொண்ட நல்ல திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. பெரும் சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்த்துப் போராடி இப்படத்தை தயாரித்து வெற்றி பெற்ற சுரேஷ் காமாட்சி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று தனது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.

சீமான் அவர்களின் இந்த வாழ்த்து தற்போது மாநாடு படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News