ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பாடல் எழுதி மேலும் பிரபலமான 5 ஹீரோக்கள்.. அதுவும் ஆண்டவர் செய்த அற்புத சாதனை

எண்பதுகளில் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் அந்தப் படத்தில் பாடல் எழுதுவது பாடல் பாடுவது, டப்பிங் போன்ற அனைத்து பணிகளையும் செய்து பன்முகத் திறமையாளர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த காலத்தில் நடிப்பது மட்டும் தான் ஒரே வேலை.

அதைத் தவிர டப்பிங், இசையமைப்பது, பாடல் பாடுவது போன்ற அனைத்தையுமே வேறொருவர் செய்வது வழக்கமாகிவிட்டது.ஆனால் இதற்கு மாறாக ஒருசில கதாநாயகன்கள் தற்போது பாடல் எழுதுவதில் ஆர்வம் காட்டி பாடல் ஆசிரியர்களாகவும், பாடகர்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றனர்.

தனுஷ்: இவருடைய நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்தில் தான் முதல் முதலாக ‘பிறை தேடும் இரவிலே உயிரே’ என்ற பாடலை எழுதி சூப்பர் ஹிட் கொடுத்தார். அதைத்தொடர்ந்து இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான 3 படத்தில் இடம்பெற்ற ‘கொலவெறி’ பாடல் சோஷியல் மீடியாவில் தாறுமாறாக ட்ரெண்ட் ஆனது. அதன்பிறகு ஏஆர் ரகுமான் இசையில் வெளியான மரியான் படத்தில் ‘கடல்ராசா நான்’ என்ற பாடலும் தனுஷ் எழுதியதுதான்.

இதன்பிறகு பா பாண்டி படத்தில் இடம்பெற்ற ‘வெண்பனி மலரே’, ‘சூரக்காத்து’ போன்ற இரண்டு பாடல்களையுமே தனுஷ்தான் எழுதினார். பிறகு தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் ‘பூமி என்ன சுத்துதே’ என்ற பாடலும் தனுஷ்தான் எழுதினார். இதேபோன்று வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற ‘அம்மா அம்மா ‘, ‘வாட் எ கருவாட்’, ‘போ இன்று நீயாக’ போன்ற ஒவ்வொரு பாடல்களையும் ஒவ்வொருவிதமாக எழுதியிருப்பார்.

இதுமட்டுமின்றி தங்க மகன் படத்தில் ‘என்ன சொல்ல ஏது சொல்ல’, ‘ஜோடி நிலவே’ போன்ற பாடல்களும் தனுஷ் எழுதியதுதான். இவரது கைவண்ணத்தில் மாரி படத்தில் இடம்பெற்ற மாரி தீம் சாங், டானு டானு மற்றும் ஒரு வித ஆசை வருகிறதா போன்ற பாடல்களையும் இவர் எழுதி இருக்கிறார். இதைத் தொடர்ந்து உலக அளவில் பேமஸ் ஆன மாரி 2 படத்தில் ‘ரவுடி பேபி’ பாடலும் தனுஷ் எழுதியது. இதைத்தொடர்ந்து சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்திலும் ‘இளமை திரும்புதே’ என்ற பாடலையும் தனுஷ் எழுதியிருக்கிறார்.

எனவே இவருடைய பாடல்கள் அனைத்தும் யதார்த்தமாகவும் இளைஞர்களை ரிப்பீட் மோடில் கேட்க வைக்கக்கூடிய குத்தாட்ட பாடல், மனதை வருடி செல்லும் மெலோடி பாடல் ஒவ்வொன்றுமே தனி மவுசு தான்.

சிம்பு: இவர் நடிப்பது மட்டுமின்றி திரைக்கதை எழுதுவது, நடனம் அமைப்பது, கேமரா இயக்குவது, பாடல் பாடுவது, பாடல் எழுதுவது என சகலகலா வல்லவனாக தமிழ்சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடக்கூடிய நபர். இவர் வல்லவன் படத்தில் ‘லூசு பெண்ணே’ என்ற பாடலை எழுதி சூப்பர் ஹிட் கொடுத்தார். அதன்பிறகு வானம் படத்தில் இவர் எழுதிய ‘எவன்டி உன்ன பெத்தான்’ என்ற பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பினாலும், இன்றும் இளைஞர்கள் தங்களது காலர் டியூன் ஆக வைத்துக் கொள்ளும் ரசனைக்குரிய பாடலாகவே இருக்கிறது. அதைத்தொடர்ந்து இவர் ஒரு சில சர்ச்சைக்குரிய பாடல்களை எழுதி சிக்கி சின்னாபின்னமாகி இருப்பதால் தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன்: இவர் முதன்முதலாக கோலமாவு கோகிலா என்ற படத்தில் ‘கல்யாண வயசு’ என்ற பாடலையும், யோகி பாபு நடித்த கூர்க்கா திரைப்படத்தில் ஒரு ஆல்பம் சாங் எழுதியிருப்பார். அதன்பிறகு நம்ம வீட்டு பிள்ளை படத்தில் காந்தக் கண்ணழகி பாடலையும். ஆதித்ய வர்மா திரைப்படத்தில் ‘இது என்ன மாயமோ’ என்ற பாடலையும் ,அதன்பிறகு டாக்டர் படத்தில் செல்லம்மா பாடலையும், நாய் சேகர் படத்தில் ‘ஓ பேபி’ பாடலையும் பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் போன்ற படத்திலும் இவர் பாடல்களை எழுதியுள்ளார்.

கமல்ஹாசன்: தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி வெளியாக இருக்கும் விக்ரம் படத்தில் ‘பத்தல பத்தல’ என்ற பாடலை எழுதி வெளியிட்டு தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பே இவர் 2010-ஆம் ஆண்டு வெளியான மன்மதன் அம்பு படத்தில் ‘நீல வானம்’ என்ற பாடலை எழுதி ஹிட் கொடுத்தார். இவர் எக்கச்சக்கமான பாடல்களையும் பாடி ரசிகர்களுக்குப் பிடித்த பாடகராகவும், நடன ஆசிரியராகவும், உதவி ஒப்பனை கலைஞராகவும், தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றியவர்.

பார்த்திபன்: கே பாக்யராஜின் உதவி இயக்குனராக அறிமுகமான இவர், அதன்பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் ஜொலித்தார். அவரே எழுதி இயக்கி தயாரித்து நடித்திருக்கும் இரவின் நிழல் என்ற படத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

Trending News