இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் சில கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் முன்னணி நடிகர்களை காட்டிலும் துணை நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் மக்களின் மனம் கவர்ந்த ஐந்து கதாபாத்திரங்களை பார்க்கலாம்.
லால்-கர்ணன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் கர்ணன். மலையாள திரையுலகில் முக்கிய இயக்குனர் மற்றும் தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வரும் லால் கர்ணன் படத்தில் ஏம ராஜா கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
டான்சிங் ரோஸ்-சார்பட்டா பரம்பரை: தமிழ் சினிமாவில் நெருங்கி வா முத்தமிட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷபீர் கல்லராக்கல். இவருடன் வில்லன், துணை நடிகர் என அடுத்தடுத்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ஆர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
கிங்ஸ்லி- டாக்டர்: தமிழ் சினிமாவில் ரெடின் கிங்ஸ்லி பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தாலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரது திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மணிகண்டன்-ஜெய் பீம்: சூர்யா நடிப்பில் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும், உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஜெய் பீம். இப்படத்தில் ராஜாகண்ணு கதாபாத்திரத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருந்தார் நடிகர் மணிகண்டன். இவருடைய நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினார்கள்.
மாறன்-டிக்கிலோனா: இந்தாண்டு சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் டிக்கிலோன. இப்படத்தில் கடைசி சில நிமிடங்கள் மட்டுமே மன நோயாளியாகத் தோன்றும் கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் மாறன் நடித்து அசத்தியிருந்தார். இவர் பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.