நெடுஞ்சாலை உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஜல்லிக்கட்டு என்ற ஒரு பிரச்சினையின் வழியாக நமக்கு பிரபலமானவர் தான் ஆரி அர்ஜுனன். கடந்த 2017 ஆம் ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சம்பவம் தான் ஜல்லிக்கட்டு போராட்டம்.
அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பல திரைப் பிரபலங்களும் சிறிது நேரம் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தாலும், அந்தப் போராட்டம் முடியும் வரை இருந்த ஒரே நடிகர் ஆரி மட்டும்தான். அந்த அளவுக்கு அவர் மக்கள் பிரச்சனைக்காக தைரியமாக குரல் கொடுக்கக் கூடியவர்.
அதன்பிறகு விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இவர் பல திட்டங்களை கொண்டு வந்து, அதை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார். அந்த வகையில் மக்களிடையே மிகப் பிரபலமாக இருந்த இவரை இன்னும் அதிக பிரபலம் ஆக்கியது பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றியாளராக மகுடம் சூடிய இவர் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடித்திருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் அந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த டிரைலரில் இடம் பெற்றிருந்த ஆரியின் காட்சிகள் அனைத்தும் தற்போது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், பாலியல் வன்முறைகள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள அந்த திரைப்படத்தில் ஆரி ஒரு போராளியாக நடித்துள்ளார். அந்த டிரைலரை பார்க்கும்போது கீழ்ஜாதி மக்கள், உயர் வர்க்கத்தினரால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தத்ரூபமாக தெரிகிறது.
அந்த மக்களுக்கு ஆதரவாக மேல்ஜாதி வர்க்கத்தினரை எதிர்த்து குரல்கொடுக்கும் ஒரு அற்புதமான கேரக்டரில்தான் ஆரி நடித்து இருக்கிறார். முகத்தில் ரௌத்திரத்துடன், கையில் துப்பாக்கியை பிடித்தபடி இருக்கும் ஆரியை பார்த்த ரசிகர்கள் முழு படத்தையும் காணும் ஆவலில் இருக்கின்றனர்.
அந்த வகையில் ஆரிக்கு இந்த படம் நிச்சயம் ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிஜவாழ்வில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் ஆரியின் ஒரிஜினல் கேரக்டர் தான் இந்தப்படத்திலும் இருப்பதாகவும் அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.