‘திருப்பதி லட்டு’ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதால்தான் மெய்யழகன் படம் இரு மாநிலங்களிலும் ஓடவில்லை என்று பிரபல சினிமா விமர்சகர் கிண்டலடித்துள்ளார். 96 என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப் பின் பிரேம் குமார் இயக்கத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி உள்ள திரைப்படம் ‘மெய்யழகன்’.
இப்படம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்திக், அரவிந்த் சாமி இருவரும் நடித்திருந்தனர். ஜோதிகா, சூர்யாவின் ‘2 டி நிறுவனம்’ தயாரித்திருந்தது.
கேங்ஸ்டர், காதல், திரில்லர் போன்ற படங்கள் வெளியாகி வரும் இன்றைய காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையாக உள்ள கதையமைப்பான இப்படம் பற்றி விமர்சனங்கள் எழுந்தன. படம் ஸ்லோவாக இருப்பதாகவும் முதல் நாளிலேயே விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் இப்படம் ரசிகர்களிடமும் சினிமாத்துறையினரிடமும் பாராட்டுகள் பெற்று வருகிறது.
இப்படத்தின் கதை: ‘தன் சொந்த ஊரில் சொத்துப் பிரச்சனையில் பூர்விக வீடு தன் சொந்தத்திற்குச் சென்றுவிடுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த அறிவுடை நம்பி ( ஜெயப்பிரகாஷ்) தன் மனைவி மகன்( அருள்மொழி) ஆகியோருடன் தஞ்சையின் நீடாமங்கலத்தில் இருந்து என்னைக்குச் சென்றுவிடுகிறார். 22 ஆண்டுகள் தன் சொந்த ஊருக்குப் போகாமல் இருக்கும் அவருக்கு சொத்துப் பறிபோன கோபம் இருந்தாலும், ஊர்ப் பாசம் என்பது மாறாமல் உள்ளது.
இந்த நிலையில் தன் சித்தியின் மகள் புவனா( சுவாதி) திருமணத்திற்குச் செல்லும் அருள்மொழிக்கு அங்கு பெயர் தெரியாத ஒருவர் அத்தான், அத்தான் என்று கூறி காட்டுகின்ற அன்பில் நனைகிறார். அந்த இளைஞருக்கும் ( கார்த்திக்) அருள்மொழிக்குமான உறவு என்பதுதான் இப்படத்தின் மீதிக் கதை.” பேருந்தை தவற விட்டதால் பெயர் தெரியாத அந்த இளைஞர்( கார்த்தி ) வீட்டில் இரவில் தங்குகிறார் அருள்மொழி. அப்போது ஓர் இரவில் இருவருக்கும் நடக்கும் உரையாடல், நினைவுகள் தான் நெகிழ்ச்சியாக உள்ளன.
கார்த்தி, அரவிந்த் சாமி இருவரின் நடிப்பும் இப்படத்தின் உணர்வுப்பூர்வமாக இருந்தாலும் படத்தின் நீளமும், நீளமான காட்சிகளும், ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் உள்ளதாக விமர்சனம் எழுகிறது. முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் குறைந்துவிடுவதாக உள்ளது.
ஆனால், மதுபானத்தை பருகாமல் வரும் உடையாடல்கள் கூட சுவாரஸ்யமானதுதான் என்றும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. குறிப்பாக, இரண்டாம் பாதியில் கார்த்தி, அரவிந்த் சாமியின் அந்த நீளமான உரையாடல் காட்சிகள் டிரிம் என இப்படத்தில் மொத்தம் 18 நிமிடங்கள் டிரிம் செய்யப்பட்டு இன்று முதல் தியேட்டரில் ஒளிபரப்பாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 96 இயக்குனரின் அடுத்த படம் என்பதால் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படத்தின் போஸ்டர் முதற்கொண்டு எல்லாம் அக்காலத்தின் நடைபெறும் கதை என்பதை நினைவூட்டுவதற்கு இயக்குனர் செய்த சமிக்ஞை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மெய்யழகன் படத்திற்கு புரமோசன் நடந்து கொண்டிருந்தபோது, திருப்பதி லட்டு விவகாரம் பற்றி நடிகர் கார்த்தி பேசியது சர்ச்சையானது.
இதுகுறித்து ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண், ‘சனாதன விவகாரத்தில் ஒரு முறை பேசும் முன் 100 முறை யோசிக்க வேண்டும்’ என்று கார்த்திக்கு அறிவுத்தினார். இதற்கு கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் மன்னிப்புக் கேட்டிருந்தனர். ‘தங்கள் படம் ஆந்திராவில் ஓட வேண்டும், வசூல் குவிக்க வேண்டும்’ என்பதற்காகத்தான் கார்த்தி, சூர்யா இருவரும் பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்டதாக நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
இந்த நிலையில், கார்த்தியின் மெய்யழகன் படம் வெளியாகி கலவையான விமர்ச்சனங்கள் பெற்று வரும் நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன், ‘’மன்னிப்பு கேட்டதால இங்க ஓடல, மன்னிப்பு கேட்டும் அங்க ஓடல’’ என்று குறிப்பிட்டு மெய்யழகன் கார்த்தி மற்றும் சூர்யாவை குத்திக் காட்டியுள்ளார். ஆனால், இப்படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களின் கூறி வருகின்றனர்.