வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பாகுபலி பிரம்மாண்டத்தை மிஞ்சிய தமிழ் படம்.. 70 ஆண்டுக்கு முன்னரே பிரமித்துப் போன ஹாலிவுட்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்று சொன்னால் நம் அனைவரின் நினைவுக்கு வருவது இயக்குனர் ஷங்கர் தான். ஆனால் தமிழ் சினிமாவுக்கு பிரம்மாண்டம் என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ஜெமினி எஸ் எஸ் வாசன்.

இன்று உலக அளவில் சாதனை படைத்த திரைப்படமாக பாகுபலி இருக்கிறது. ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்னரே அப்படி ஒரு சாதனையை நிகழ்த்திய திரைப்படம்தான் சந்திரலேகா. இப்படம் தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்.

ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளர் எஸ் எஸ் வாசன் இயக்கி, தயாரித்த இந்த சந்திரலேகா திரைப்படம் பல சாதனைகளை நிகழ்த்தியது. இப்படம் அந்த கால சினிமா வரலாற்றில் மிக அதிக பொருட் செலவில் அதாவது 35 லட்ச ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்.

பிரபல இயக்குனர் ராகவாச்சாரி இந்த படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக தயாரிப்பாளர் வாசன் இந்த திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார். இவரின் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமே சரித்திர திரைப்படமாக மாறும் என்று அவர் நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த அளவுக்கு இப்படம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. கிட்டத்தட்ட 5 வருடங்கள் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டது. சர்க்கஸ் பின்னணியைக் கொண்ட இந்த திரைப்படத்திற்காக ஒரு சர்க்கஸ் கம்பெனியை தயாரிப்பாளர் தங்கள் இடத்திலேயே தங்க வைத்து படமாக்கினார். அந்த கம்பெனி பின்னால் ஜெமினி சர்க்கஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் இந்தத் திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் 6 மாதங்கள் ஒத்திகை செய்து அந்த பாடலை படமாக்கினார்கள். இதனால் பல கடன் சுமைக்கு ஆளான தயாரிப்பாளர் மன உறுதி தளராமல் இந்த திரைப்படத்தை முடித்து வெளியிட்டார்.

தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அதிக தியேட்டர்களில் இந்த திரைப்படம் வெளியானது. சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. மேலும் அதிக லாபத்தை பெற்ற ஒரே திரைப்படமாகவும் சந்திரலேகா அமைந்தது.

இப்படம் ஆங்கில சப்டைட்டில் உடன் பிரிட்டனில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து ஹாலிவுட் இயக்குனர்கள் பலரும் ஆச்சரியப்பட்டனர். ஒரு தமிழ் இயக்குனரால் எப்படி இவ்வளவு பிரமாண்டமான திரைப்படத்தை எடுக்க முடிந்தது என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. அப்படிப்பட்ட ஒரு பெருமையை தமிழ் சினிமாவுக்கு தேடித்தந்த சந்திரலேகா திரைப்படம் இன்றும் பலரின் நினைவில் நிற்கிறது.

Trending News