சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

கொரியரில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாக கூறி மோசடி.. சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு வீடியோ!

கொரியரில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாக கூறி மோசடி செய்யும் கும்பல் பற்றி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகரித்துள்ள இணையதள மோசடிகள்

இணையதளம் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட தொழில் நுட்ப வசதிகள் மிகுந்துள்ள இக்காலத்தில் மக்களை ஏமாற்றி மோசடி செய்யும் கும்பலின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், வங்கியில் பணம் வைத்திருக்கும் முதியவர்களை டார்கெட் செய்து, கொரியரில் இருந்து வரும் பேசுவதுபோல் அழைத்து, அவர்களின் ஆதார் எண்களைப் பயன்படுத்தி, சட்ட விரோதமான பொருட்கள் அவர்களுக்கு வந்திருப்பதாகக் கூறி மிரட்டி ஏமாற்றி பணம் பறிப்பதாக தகவல் வெளியானது.

இதேபோல், வீடியோ கால் மூலம் பேசி அவர்களிடம் பணம் பறிப்பது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, அவர்களின் கேஒய்சி விவரங்கள் குறிப்பாக பான் கார்டு, ஆதார் கார்டு, ஓடிபி எண்களை பெற்று மோசடி செய்வது. உங்களுக்குப் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. அது கிடைக்க நான் கூறும் தொகையைக் கட்ட வேண்டும் என்று பணம் பறிப்பது.

பிரபல ஆன்லைன் விற்பனை மையங்களைப்போல் போலியான இணையதளங்கள் மூலம் பரிவர்த்தனையில் பணம் பெற்று மோசடி செய்வது இதெல்லாம் நடந்து வருகிறது. இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க போலீஸார் பல்வேறு விழிப்புணர்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழிப்புணர்வு வீடியோவில் காமெடி நடிகர் யோகி பாபு

இந்த நிலையில், கொரியரில் சட்டவிரோதமான பொருட்கள் இருப்பதாக கூறி மோசடி கும்பலை பற்றீ சைபர் கிரைம் போலீஸார் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், காமெடி நடிகர் யோகி பாபு பேசியுள்ளதாவது: ’’சமீபகாலமாக முதியவர்கள் அல்லது சில நபர்களுக்கு போன் கால் வருகிறது. அந்தப் போன் காலில், நாங்கள் கொரியரில் இருந்து பேசுகிறோம். உங்களுடைய, மும்பையில் இருந்து சைனா போன பார்சலில், 5 கிலோ தங்கமோ, பல போதைப் பொருட்கள், புலித்தோல், பணம், டாலர் இதெல்லாம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்தப் பார்சலுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் உண்டு என்று கூறுகிறார்கள். இப்போது நீங்கள் போனைக் கட் செய்தால் உங்களைச் சுற்றி எங்களின் மும்பை போலீசார் உள்ளனர். உங்களை உடனே கைது செய்து விடுவார்கள். அதனால் நாங்கள் சொல்வதை முழுதாக கேட்க வேண்டும். உங்கள் முழு விவரங்களை எங்களுக்கு அனுப்ப வேண்டும். அதை நாங்கள் பெற்ற பின் எங்களின் ரிசர்வ் பேங்கில் எங்களுக்கு டிரான்ஸ்பர் பண்ண வேண்டும்.

அது உங்களின் பணமா என்பதை கண்டறிந்த பின் தான் திரும்ப கொடுப்போம். இதுபோக வீடியோ காலிலும் அவர்கள் வருவார்கள். போலீஸார் வீடியோ காலில் வரமாட்டார். அதனால் யாரும் ஏமாற வேண்டாம். இதுமாதிரி போன் வந்தால் 1930 என்ற எண்ணுக்குப் போன் செய்து, நேரான சென்னை மா நகர காவல்துறையில் புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

காவல் ஆணையர் அருண் அறவுறுத்தல்

இதுமாதிரியா மோசடிப் புகாரில் இதுவரை ரூ.10 கோடி வரை மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மோசடி போன் நம்பர்களின் அழைப்பை ஏற்கவோ, லிங்கை கிளிக் செய்யவோ வேண்டாம் என்று சென்னை சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. மேலும்,சென்னையில் மட்டும் இவ்வருடம் பல கோடி ரூபாய் இதுபோல் மோசடி கும்பல் பலரை ஏமாற்றிப் பணம் பறித்திருப்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் விழிப்புடன் இருக்கும்படி காவல் ஆணையர் அருண் அறிவிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -spot_img

Trending News