சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

முதல் நாளில் ரூ.100 கோடி வசூல் – ‘தேவரா’ முதல் ‘பாகுபலி’ வரையிலான மொத்த லிஸ்ட்! இதில தளபதி இல்லையா?

எதிர்பார்ப்பிற்குரிய ஒரு படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸாகிறது என்றால் அந்த படத்தில் நடித்துள்ள பிரபல நடிகர்களின் ரசிகர்களைக் கையில் பிடிக்க முடியாது. அவர்கள் எண்ணமெல்லாம் அப்படத்தை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதில்தான் இருக்கும். அப்படி ரசிகர்களால்தான் ஒரு படம் வெற்றி, தோல்வி, வசூல் சாதனை எல்லாம் நடக்கிறது. அந்த வகையில் முதல் நாள் ரிலீஸின்போது வசூல் சாதனை படைத்த படங்களில் பட்டியலை பார்க்கப் போகிறோம்.

உலக முழுவதும் சினிமா தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் இந்தப் பொழுதுபோக்கு அம்சத்தை இவ்வளவு தீவிரமாக பற்றிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் மாதிரி வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்காமல் அதை தங்களோடும் தங்கள் வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கும் அதில் மகிழ்ச்சி அடைவதை பல ரசிகர்கள் வழக்கமாகவே வைத்திருப்பார்கள் என்பது போல் சில சம்பவங்கள் நடக்கிறது.

இந்தியாவில், பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என்று தனித்தனியாக இயங்கி வந்தாலும் எம்மொழியில் நல்ல தரமான படங்கள் வந்தாலும் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் எல்லா மொழியிலும் உள்ளனர். அது சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும் சரி, புதுமுக நடிகர்களின் படங்களாக இருந்தாலும் சரி.

அந்த வகையில், சமூக வலைதளங்களின் வருகையால் இன்று புதிய படம் ரிலீஸான அன்றே பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தெரிந்து வருகிறது. அன்றே அப்படம் வசூல் நிலவரம், விமர்சனத்தை வைத்து அப்படம் தோல்வியா? பிளாக்பஸ்டரா என்பது கணிக்கப்படுகிறது. அந்தக் காலம் போல் 50 நாட்கள், 100 நாட்கள் எல்லாம் இப்போது காண்பது அரிதாகிவிட்டது.

இந்த நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில், கொரட்டலா சிவா இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸான படம் தேவரா. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், ரிலீஸான முதல் நாளில் ரூ.158 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. சோலோ ஹீரோவாக பிரபாஸுக்குப் பிறகு தெலுங்கில் ஒரே நாளில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது ஜூனியர் என்.டி.ஆர் படம்தான் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இதுவரை வெளியான படங்களில் ஒரே நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் குவித்த படங்களின் பட்டியலைப் பார்க்கலாம். அதில், முதல் இடத்தில், ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம் ரூ.220 வசூலித்து முதலிடத்தில் உள்ளது.ராஜமெளலில் பிரபாஸ் கூட்டணியில் உருவான பாகுபலி 2 ஆம் பாகம் ரூ.214 கோடி வசூலித்து 2 வது இடத்தில் உள்ளது. கல்கி 2898 ஏடி ரூ.171 கோடி வசூலித்து 3 வது இடத்திலும், சலார் ரூ.165 கோடி வசூலித்து 4 வது இடத்திலும், யாஷின் ஜே.ஜி.எஃப் -2 ரூ.163 கோடி வசூலித்து 5வது இடத்திலும் உள்ளன.

அதேபோல், தேவரா ரூ.158 கோடி வசூலித்து 6 வது இடத்திலும், விஜய்யின் லியோ படம் ரூ.140 கோடி வசூலித்து 7 வது இடத்திலும், ஆதிபுரூஸ் ரூ.131 கோடி வசூலித்து 8 வது இடத்திலும், சாஹோ ரூ.126 கோடி வசூலித்து 9 வது இடத்திலும், ஜவான் ரூ.126 கோடி வசூலித்து 10 வது இடத்திலும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், ”ரசிகர்கள் இந்த வசூலை தம்பட்டம் அடித்து கூறி, விவாதிப்பதைக் காட்டிலும் படத்தைப் பார்த்து ரசித்துவிட்டு செல்லலாம்” என்று பிரபல நடிகர் கருத்துக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Trending News